போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனே என்னை கூப்பிடுங்க - போன் நம்பரை பள்ளி மாணவர்களுக்கு கொடுத்து புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டே அதிரடி!
    புதுக்கோட்டை  அரசு பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியின்போது, பள்ளிகள் அருகில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் உடனடியாக என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறி மாணவர்களுக்கு தொலைபேசி எண்ணை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே.

தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்த கூடாது என்பது குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நிஜாம் காலனி அருகே உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோரின் தலைமையில்  200க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாணவர்கள் உறுதிமொழியேற்பு
இதில் போதைப்பொருள் எதிரான உறுதிமொழியை மாணவி வாசிக்க, அனைத்து மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்  ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை யாரேனும் விற்பனை செய்தால் உடனடியாக எனது தொலைபேசி எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் மாணவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாணவர்களுக்கு தன்னுடைய தொலைபேசி எண்ணை கூறினார்.

அப்போது, அங்கிருந்த அனைவரும் ஆர்வத்துடன் தங்களது நோட்டுப் புத்தகங்களில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே  நம்பரை குறித்து வைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர், நகரமன்ற உறுப்பினர்கள், பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments