போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்.அமைச்சர்கள் பங்கேற்பு.





விழிப்புணர்வு ஊர்வலம்

புதுக்கோட்டை நீதிமன்ற அலுவலக வளாகத்திலிருந்து, போதைப்பொருள் தடுப்பு குறித்த மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் அண்ணாசிலை, பிருந்தாவனம் வழியாக நகர்மன்றம் சென்று நிறைவடைந்தது. போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தியபடி, போதைப்பொருள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

இதில், அரசு முன்மாதிரி பள்ளி, பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி, ராணியார் மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, டி.இ.எல்.சி. மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் மேல்நிலைப்பள்ளி, திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் உயர்நிலைப்பள்ளி, காந்திநகர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீரமங்கலம்

கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து ஆசிரியர்களும், மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், பள்ளி மாணவிகளான நீங்கள் வீட்டில் உங்கள் தந்தை, அண்ணன், தம்பி என உங்கள் உறவினர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும். மேலும் அது போன்ற பழக்கங்களை மாற்றுவதற்கு உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் செலுத்த சொல்ல வேண்டும். விளையாட்டுகளில் சாதிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் தேடிவருகிறது. உடல் நலனும் ஏற்படுகிறது என்றார்.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரிமளம்

அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு அரிமளம் ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் மாரிக்கண்ணு முத்துகுமார், தலைமை ஆசிரியர் சுமதி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்லப்பா மற்றும் ஒன்றிய, நகர, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments