புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் கவிதாராமு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.






சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கவிதாராமு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை திறந்த ஜீப்பில் சென்று நின்றபடி பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார்.

பின்னர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் பலூன்களையும், சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும் அவர் பறக்கவிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் 20 பேரை அவர் கவுரவித்தார். மேலும் பல்வேறு துறைகளின் திட்டங்களில் 101 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரத்து 26 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதாராமு வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 609 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் துணிப்பைகளை கலெக்டர் வழங்கினார். போலீஸ் துறையில் 47 பேருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் 10 பள்ளிகளை சேர்ந்த 901 மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எனது இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தேசப்பற்று, பிரபஞ்ச பாதுகாப்பு, சுதந்திர இந்தியா, வீரிய வாசகம் வந்தே மாதரம், பிரமிட் ஆகிய பல்வேறு மையக் கருத்துகளை உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாணவ-மாணவிகள் அசத்தல் நடனமாடினர். தேசப்பற்றை உணர்த்தும் வகையில் கையில் தேசிய கொடி மற்றும் மூவர்ண நிறங்களில் ஆடைகள் அணிந்தும் நடனமாடினர். பழமையை குறிக்கும் வகையில் ஆதிவாசிகள், நாடோடிகள் போன்ற வேடமணிந்தும், வண்ண பொடியை உடலில் பூசியும் நடனமாடினர். மாணவ-மாணவிகளின் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

2 ஆண்டுகளுக்கு பிறகு...

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கலைநிகழ்ச்சிகள் எதுவும் இல்லாமல் கொடியேற்றம் நிகழ்ச்சி மட்டும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின் இந்த ஆண்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பார்வையாளர்களும் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை காண பொதுமக்களும் அதிகம் பேர் வந்திருந்தனர். இதனால் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டது. சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பார்வையாளர்களும் உற்சாகமாக கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.

பொது விருந்து

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி உள்பட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் கலெக்டர் கவிதாராமு கலந்து கொண்டார். பொதுவிருந்தில் அப்துல்லா எம்.பி., நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments