புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பயறு உற்பத்தியை அதிகரிக்க ரூ.17 லட்சம் மானியம் ஒதுக்கீடு வேளாண்மை இணை இயக்குனர் தகவல்




புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் உளுந்து, துவரை, தட்டப்பயறு, கொள்ளு முதலிய பயறு வகைகள் 6,000 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் நடப்பு 2022-23-ம் ஆண்டில், பயறு வகைப் பயிர்களில் சாகுபடி பரப்பு மற்றும் விளைச்சலை அதிகரிக்க ரூ.17 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க எக்டேருக்கு ரூ.7 ஆயிரத்து 500 மானியம், திருவரங்குளம், கறம்பக்குடி மற்றும் கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு 60 எக்டேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கி மற்றும் குன்றாண்டார்கோவில் வட்டாரங்களில் பயறு தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைக்க 40 எக்டேருக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உளுந்து விதைகள், கிலோவுக்கு ரூ.50 மானியத்தில் வினியோகிக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயறு விதை உற்பத்திக்காக கிலோவிற்கு ரூ.25 ஊக்கத்தொகை உதவி வழங்கப்படுகிறது.

 இதற்காக ரூ.2 லட்சத்து 12 ஆயிரத்து 500 புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயறு பயிர்கள் நுண்சத்துக்கள் குறைபாடின்றி வளர்ந்து விளைச்சல் கொடுத்திட பயறு நுண்சத்து 50 சதவீதம் மானியம் அல்லது எக்டேருக்கு ரூ.500 மானியம் என 114 எக்டேருக்கும், உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியம் அல்லது எக்டேருக்கு ரூ.300 மானியம் என 431 எக்டேருக்கும், பயிர் பாதுகாப்பு மருந்துகள், 50 சதவீதம் மானியம் அல்லது எக்டேருக்கு ரூ.500 மானியம் என 64 எக்டேருக்கும், விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பண்ணை கருவிகளில் ரோட்டவேட்டர் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் அல்லது ரூ.34 ஆயிரம் மானியம், ஆதிதிராவிடர், சிறு, குறு மலைவாழ் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.42 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வட்டார அளவில் அந்தந்த வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments