காரைக்கால் (இந்தியா) - காங்கேசன் (இலங்கை) இடையே கப்பல் போக்குவரத்து நடப்பாண்டிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்




காரைக்கால்- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நடப்பாண்டிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து

மீன்வளர்ப்போர் மேம்பாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் செலவில் 50 சதவீத மானியத்தில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மீன்பிடி வலை வழங்கப்படும். காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த 50 மீனவ பயனாளிகளுக்கு புதிய பைபர் கட்டுமரங்கள் வாங்குவதற்காக 50 சதவீத மானியத்தொகையாக தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.எந்திரம் பொருத்தாத பைபர் கட்டுமர உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், மொத்தம் ரூ.42.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

காரைக்கால் துறைமுகம்-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து நடப்பாண்டிலேயே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோலசென்னை துறைமுகத்துடன் இணைந்து புதுச்சேரி துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகளும் செயல்பட தொடங்கும்.

மிதக்கும் படகு துறை

பனித்திட்டு கிராமத்தில் சிறிய மீன்பிடி இறங்குதளம் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும். உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக தற்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்படும். திரு-பட்டினத்தில் ஒருசிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாகர்மாலா திட்டத்தின்கீழ் புதுவை தேங்காய்த்திட்டில் (ரூ.9.81 கோடி), பட்டினச்சேரி (ரூ.5.83 கோடி), அரசலாறு (ரூ.9.14 கோடி), ஏனாம் (ரூ.9.34 கோடி) பகுதிகளில் மிதக்கும் படகுதுறை கட்டப்படும்.

ரூ.7.82 கோடி செலவில் புதுவை கடலோர காவல்துறைக்கு ரூ.1.86 கோடி மதிப்பில் 5 டன் எடை கொண்ட 4 மீட்பு மற்றும் ரோந்து படகுகள் கொள்முதல் செய்யப்படும். நடப்பு நிதியாண்டில் இத்துறைக்கு ரூ.124.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments