தனி ஒருவனாக 1,500 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் விவசாயி- புதுக்கோட்டை பசுமை சாம்பியனின் பயணம்




        தனிநபராக அரசு இடங்களிலும், நீர்நிலைக் கரைகளிலும் 1,500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு 5 ஆண்டுகளாக பராமரித்து வரும் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு 'பசுமை சாம்பியன்' விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவர் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஐயனார் கோவில் மற்றும் அரசு நீர்நிலைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனி நபராக பலவகையான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறார்.



ஏறத்தாழ 5 ஆண்டுகளாக இந்த மரக்கன்றுகளை நட்டு அவற்றை பாதுகாத்து பராமரித்து வரும் ரமேஷ், முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களின் நினைவாக மரக்கன்றுகளை நடுமாறு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலரையும் ஊக்குவித்துள்ளார். ஐயனார் கோவில் பகுதியில் மரக்கன்றுகளை நடவு செய்ய சொல்லி அவற்றையும் அவரே பராமரித்து வளர்த்து வருகிறார். 

விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் ரமேஷ், தனது விவசாயப் பணிக்கான நேரம் தவிர்த்து காலையில் மூன்று மணி நேரம் மாலையில் மூன்று மணிநேரம் என ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்தை மரக்கன்றுகளை நடவு செய்யவும், அவற்றை பராமரிக்கவுமே செலவிடுகிறார்.





இவற்றை பராமரிக்க மழைக் காலங்களில் ஐயனார் கோவில் குளத்திலிருந்து குடங்களில் நீரை எடுத்து சைக்கிளில் சென்று ஊற்றி விடுகிறாராம்.

ஆனால், கோடைக் காலங்களில் குளத்தில் நீர் வற்றி விடுவதால், தனது சொந்த செலவில் வாரத்திற்கு மூன்று முறை டேங்கரில் நீர் வரவழைத்து அதனை மரக்கன்றுகளுக்கு ஊற்றி பராமரிக்கிறார்.

தனி ஒருவனாக செயல்பட்டு வந்த தனக்கு தற்போது ஒரு ஆண்டாக தனது தொடக்கல்வி பயிலும் இரு மகன்களும் உதவிக்கு வருவதாகத் தெரிவிக்கிறார். இவர் நடவு செய்த மரக்கன்றுகளில் 1,500 கன்றுகள் ஆள் உயரத்தை தாண்டி செழுமையாக வளர்ந்து நிற்கின்றன.

5,000 மரக்கன்றுகளை நடவு செய்து கொத்தமங்கலம் ஐயனார் கோவில் பகுதியில் ஒரு குறுங்காட்டை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள் என தெரிவிக்கிறார் ரமேஷ்.

மரங்கள் நடவு செய்தலையும் தாண்டி, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி பல தரப்பு மக்களையும் மரம் வளர்க்க ஊக்குவித்தும் வருகிறார் ரமேஷ்.

இவரது இயற்கை சேவையைப் பற்றி கேள்விப்பட்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சில மாதங்களுக்கு முன்னர் ரமேஷின் சொந்த கிராமமான கொத்தமங்கலத்திற்கு நேரில் வந்து அவரது பணிகளை பார்வையிட்டு, அவரை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் அவரும் ரமேஷின் குறுங்காடு அமைக்கும் பணிக்கு ஏதுவாக சில மரக்கன்றுகளை நடவு செய்து சென்றுள்ளார்.





இவரது இயற்கை சேவை மேலும் தொடரவும், தொய்வில்லாமல் உற்சாகத்தோடு செயல்பட்டு அவரது குறுங்காடு கனவை நிறைவேற்ற ரமேஷை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் இணைந்து ‘பசுமை சாம்பியன்’ என்ற விருதையும், ஒரு லட்சம் ரூபாய்கான காசோலையும் வழங்கி ரமேஷை கவுரவப்படுத்தி இருக்கிறது.

இந்த பாராட்டும், பட்டமும் தனக்கு பெரிய ஊக்கத்தை தருவதாகவும், தன்னை மிஞ்சும் வகையில் வருங்கால இளைஞர்கள் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடவு செய்து பராமரிக்க முன்னோடியாக செயல்பட இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் ’பசுமை சாம்பியன்" ரமேஷ்.

இத்தோடு மட்டும் நின்று விடாமல், பொதுமக்கள் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வளர்க்க ஊக்குவிக்கும் விதமாக பலருக்கும் இலவசமாக 5,000-க்கும் மேற்பட்ட பல வகையான மரக்கன்றுகளை தானே பதியம் செய்து வளர்த்து வருகிறாராம். விரைவில் அவற்றை பொதுமக்களுக்கு வழங்கி வறண்ட பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமை பூமியாக மாற்றுவார் என பெருமிதம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

நன்றி: News 18 தமிழ் ‌

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments