திருமணத்துக்காக சேமித்து வைத்த ரூ.9.50 லட்சத்தைக் கொண்டு, தனது சொந்த கிராமத்துக்கு சாலையை அமைத்திருக்கிறார் இளைஞர் ஒருவர்.




        விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.சந்திரசேகரன் (31). சென்னையில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வரும் இவர், தனது திருமணத்துக்காகச் சேமித்து வைத்திருந்த ரூ 9.50 லட்சத்தில் தன் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளார்.

இதுகுறித்து சந்திரசேகரனிடம் கேட்டபோது, “சென்னையிலுள்ள ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்பத் வல்லுநராக பணியாற்றி வருகிறேன்.

எங்கள் கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெரு 25 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது குண்டும் குழியுமாக உள்ளது. நடந்து செல்லவே மிகவும் சிரமமாக இருந்தது. இதனை சீரமைக்க அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டினர்.


‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் இச்சாலையை சீரமைக்கலாம் என சிலர் ஆலோசனை தர, வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். 50 சதவீத தொகையை செலுத்துமாறு தெரிவித்தனர். இத்தொகைக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட செலவினங்களை கணக்கிடும்போது மொத்தம் திட்ட மதிப்பீட்டில், அளிக்க வேண்டியத் தொகை 60 சதவீதத்தை எட்டியது.

எனது திருமணத்துக்காக வைத்திருந்த ரூ. 9.5 லட்சம் தொகையை, இந்த சாலை அமைப்பதற்காக தர முடிவு செய்தேன். என் பெற்றோர் பெருமாள் -லட்சுமியிடம் இது குறித்து கேட்டேன். இதில் அவர்களுக்கும் ஆர்வம் இருந்தாலும், ‘உள்ளூர் அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்’ என்று கூறி, சற்றே பயந்தனர். அவர்களை தைரியப்படுத்தி சாலை அமைக்க தயாரானேன்.

இது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் என் நண்பர் ஏழுமலையைத் தொடர்பு கொண்டேன். அரசின், ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 100 சதவீத பங்களிப்புடன் இத்திட்டத்தை மேற்கொள்ளலாம்’ என்று அவர் தெரிவித்து, அதற்கான நிர்வாக ஒப்புதலைப் பெற உதவினார். 290 மீட்டர் சிமென்ட் சாலை அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கியது; ஒரே மாதத்தில் நிறைவடைந்தது.

இச்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் ரூ.10.50 லட்சம் செலவிட அனுமதி அளித்தது. இந்த அனுமதியை பெற உதவிய விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் சோமசுந்தரம், செல்வகணபதி ஆகியோருக்கு எனது நன்றி.

சாலை அமைக்க ரூ. 9.50 லட்சம் செலவானது. சாலை அமைக்கும் பணியை நாள்தோறும் வானூர் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மேற்பார்வை செய்தனர்” என்று கூறும் சந்திரசேகரன் குரலில் ஒரு மனநிறைவை உணர முடிந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments