என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு அடுத்த மாதம் 10-ந் தேதி தொடக்கம் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு




என்ஜினீயரிங் படிப்புக்காக பொது கலந்தாய்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

பொதுப்பிரிவு கலந்தாய்வு

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு (கவுன்சிலிங்) அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் பொது கலந்தாய்வு (அகடமிக், அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு மற்றும் தொழில்பிரிவு) தொடங்கப்பட்டு நவம்பர் 11-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

இந்த பொது கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறுகிறது. 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். 2-வது கட்டம் 25-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறும். இதில் கால இடைவெளி அளிக்கப்படுவது எதற்காக என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கட்டணம் கட்டி கல்லூரிகளை தேர்வு செய்வதற்காக அவர்களின் நலன் கருதி இந்த கால இடைவெளி ஒதுக்கப்படுகிறது.

3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறும். 4-வது கட்டமாக 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும்.

இடஒதுக்கீடு

4 கட்டங்களாக நடைபெறும் கலந்தாய்வுகளில் பொது போட்டிகளும் அடங்கும். அதற்கான 31 சதவீத ஒதுக்கீட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும். அதாவது 31 சதவீத ஒதுக்கீட்டில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கப்படுகிற 30 சதவீத ஒதுக்கீட்டில், 3.5 சதவீதம் இஸ்லாமியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும். அதிலும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு கொடுக்கப்படும்.

ஆதிதிராவிட மாணவர்களுக்கான 18 சதவீத ஒதுக்கீட்டில், 3 சதவீத உள் ஒதுக்கீடு அருந்ததியர் மாணவர்களுக்கு வழங்கப்படும். 1 சதவீத இடஒதுக்கீடு பழங்குடியினருக்கு கொடுக்கப்பட்டு, அதிலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும். இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள்) 7.5 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும்.

துணை கலந்தாய்வு

விடுபட்ட மாணவர்களுக்காக காலியாக உள்ள இடங்களுக்கு நவம்பர் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை துணை கலந்தாய்வு நடைபெறும். அதில் 2-வது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களும் அதில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

எஸ்.சி.ஏ. முதல் எஸ்.சி. வகுப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 19 மற்றும் 20-ந் தேதிகளில் நடைபெறும். அனைத்து கலந்தாய்வும் ஆன்லைனில் நடக்கும். நவம்பர் 20-ந் தேதி கலந்தாய்வுகள் நிறைவடையும்.

துணை வேந்தர் மாநாடு

துணை வேந்தர்கள் கருத்தரங்கு வருகிற 30-ந் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தை உயர் கல்வித்துறை சார்பில் கூட்டியுள்ளோம். பாடத்திட்டத்தில் ஒரே பிரிவை அதிகம் மாணவர்கள் கேட்கின்றனர்.

எந்தெந்த கல்லூரிகளுக்கு எத்தனை விண்ணப்பங்கள் வந்துள்ளன? என்பதை கணக்கெடுத்து, அந்த அடிப்படையில் அந்த பிரிவை எந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதை கலந்தாலோசித்து அறிவிப்பு அறிவிக்கப்படும்.

பாடத்திட்டத்தை பொறுத்தவரை என்ஜினீயரிங் படிப்புக்கு துணை வேந்தரே அறிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, என்ஜினீயரிங் படிப்புகளில் தமிழ் மொழி பாடமே இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அரசு கலை கல்லூரிகள், பல்கலைக்கழகத்துக்கு தகுந்தபடி மொழிப்பாடம் மாறியுள்ளது. அதையும் ஒருங்கிணைத்து துணை வேந்தர்கள் கருத்தரங்கில் பேசி எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒவ்வொரு செமஸ்டரிலும் தமிழ், ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அதுவும் எல்லா பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்படும்.

புதிய பாடத்திட்டம்

கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பயிற்சி அளிக்கும் வகையில் புதிய பாடத்திட்டங்களை சேர்க்கும் வகையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த ஆண்டே என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கலை கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் 2-வது செமஸ்டரில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும். மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, மாணவிகளும் திருந்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

©
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments