‘நீட்’ தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! ஆற்றுப்படை அறக்கட்டளை தகவல்!!



நீட் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக ஆற்றுப்படை அறக்கட்டளை அறிவித்து உள்ளது.
சமூக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக தினத்தந்தி குழும இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ‘பெல்லோ சிட்டிசன்' (சக மனிதர்களின் மேன்மைக்கான அமைப்பு) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்கள்.

இந்த அமைப்பு சமூக மேம்பாட்டில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொள்ளும் இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னையை சேர்ந்த மருத்துவம் படித்து வரும் மாணவரும், ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனருமான கார்த்திகேயன், ‘பெல்லோ சிட்டிசன்' தொண்டு நிறுவனம் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

ஆற்றுப்படை அறக்கட்டளை மூலமாக கார்த்திகேயன், மருத்துவ படிப்புகளுக்கு தயாராகும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறார். இதுதொடர்பான திட்டங்களுக்கு ‘பெல்லோ சிட்டிசன்' தொண்டு நிறுவனம் உதவி செய்து வருகிறது. ஆற்றுப்படை அறக்கட்டளை, ‘நீட்’ தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதற்கான 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி உள்ளது.

இதற்கு விண்ணப்பம் செய்வதற்கு கடந்த 13-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகமான விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆர்வத்தின் காரணமாக, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக பெற பதிவு செய்வதற்கான காலஅவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 21-ந் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.
 
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இதற்கான தேர்வு வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. பரீட்சையை தொடர்ந்து ‘ஜஸ்ட் கெட்' அமைப்பின் நிறுவனரும், டாக்டருமான மாணிக்கவேல் ஆறுமுகம், எம்.இ.ஆர்.எப். நிர்வாக இயக்குனரும், பேராசிரியருமான ரஞ்சித் ராஜேஷ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளும் தொழில் வழிகாட்டுதல் அமர்வு நடைபெற இருக்கிறது.
தனியார் கல்லூரியின் துணை முதல்வரும், உடற்கூறியல் துறை தலைவருமான டாக்டர் டி.எச்.கோபாலன் முன்னிலை வகிக்கிறார். அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு நிகழ்ச்சி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு www.aatrupadaifoundation.com, 9363368271 மற்றும் 9363354173 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் ஆற்றுப்படை அறக்கட்டளையின் நிறுவனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments