மணமேல்குடி பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் செயல்பட கோரிக்கை!பொதுமக்களின் அவசர காலங்களில் உதவும் 108 ஆம்புலன்ஸ் சேவை மணமேல்குடி பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவை 24*7 என்ற நிலையில் இயங்க வேண்டும். ஆனால் அப்பகுதியில் பகலில் 12 மணி நேரம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த ஆறு மாத காலமாக பகுதி நேரம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ஏற்படும் விபத்துகளுக்கு 108 ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலை உள்ளது. பகலில் கூட ஏதாவது ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியும். இரவில் அதற்கெல்லாம் சாத்தியம் இல்லை. மணமேல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏற்படும் பிரசவம், நெஞ்சுவலி போன்ற அவசரத்திற்கு இரவில் ஏழை மக்கள் அவதிபடுகின்றனர். மேலும் இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே பொதுமக்கள் நலன் கருதி மணமேல்குடி பகுதியில் ஆம்புலன்ஸை 24 மணி நேரமும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 35 இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மணமேல்குடி, வல்லத்திராக்கோட்டை, காரையூர், பரம்பூர், புனல்குளம், மழையூர், வாராப்பூர் மற்றும் ராஜநாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் 108 ஆம்புலன்ஸ் இரவு நேரங்களில் இயக்கப்படுவதில்லை. நாள் முழுவதும் இயக்கப்பட்டு வந்த இந்த ஆம்புலன்ஸ்கள் கடந்த சில மாதங்களில் இரவு நேரங்களில் இயக்கப்படுவது ஒவ்வொரு இடமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 8 இடங்களுமே கிராமப்பகுதிகளாக இருப்பதால் அப்பகுதியினரால் இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு உடனடியாக மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments