கறம்பக்குடி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு




கறம்பக்குடி அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

கறம்பக்குடி அருகே உள்ள இலை கடிவிடுதி ஆதிதிராவிடர் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிமெண்டு சாலை குறுகலான நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைத்து கால்வாய் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இலை கடிவிடுதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மக்கள் நேற்று மாலை கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டியில் கறம்பக்குடி- புதுக்கோட்டை பிரதான சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments