புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருச்சி-விருதுநகர் ‘டெமு’ ரெயில் கழிவறை பெட்டியுடன் இயக்க பயணிகள் கோரிக்கை
புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருச்சி-விருதுநகர் ‘டெமு’ ரெயிலை கழிவறை பெட்டியுடன் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெமு ரெயில்

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடியும், காரைக்குடியில் இருந்து விருதுநகர் வரையும் டெமு ரெயில் இயக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின் சமீபத்தில் இந்த ரெயில் முழு சேவை தொடங்கப்பட்டது. இரு மார்க்கத்தில் இருந்தும் இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

பயணிகள் ரெயில் என்பதால் இந்த ரெயிலில் கழிவறை வசதி இல்லாதது பெரும் குறையாக உள்ளது. நீண்ட தூரம் பயணிக்க கூடிய இந்த ரெயிலில் பெட்டிகளில் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில் கழிவறை வசதியுடன் கூடிய டெமு ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கழிவறை வசதி

திருச்சி-விருதுநகர் இடையே சுமார் 5.30 மணி நேரம் இந்த ரெயில் பயணிக்கிறது. இந்த ரெயில் திருச்சி-காரைக்குடி வரை ஒரு எண்ணிலும், காரைக்குடியில் இருந்து விருதுநகர் வரை மற்றொரு எண்ணிலும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இருந்தும் இதேபோல வெவ்வேறு எண்களுடன் இயக்கப்படுவதால் இந்த ரெயில் நீண்ட தூரம் பயணிக்க கூடிய ரெயில் என்பதில் இடம்பெறுவதில்லை.

இதனால் கழிவறை வசதியை ஏற்படுத்தாமல் ரெயில்வே நிர்வாகம் தவிர்த்து வருகிறது. எனவே மக்கள் பிரதிநிதிகளும், ரெயில்வே அதிகாரிகளும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த ரெயிலை கழிவறை வசதி உடன் கூடிய பெட்டிகள் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments