புதுக்கோட்டை மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்; 388 மனுக்கள் பெறப்பட்டன



புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்து மனு அளித்தனர்.
இதில் குளத்தூர் தாலுகா புலியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வீட்டு மனைப்பட்டா கோரியும், தங்களுக்கு வீடு வழங்க கோரியும் மனு அளிக்க வந்திருந்தனர். இதேபோல முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். 
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.1,350 வீதம் 12 பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16,200 மதிப்பிலான பிரெய்லி கைக்கெடிகாரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும் ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தரவரிசை பேட்மிண்டன் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கலந்துகொண்டு வெள்ளி பதக்கங்களை வென்றதைத் தொடர்ந்து, கலெக்டரை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments