புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?




புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில் நிலையம்

மதுரை கோட்ட ரெயில்வேயில் முக்கியமான ரெயில் நிலையமாக புதுக்கோட்டை காணப்படுகிறது. திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் அமைந்துள்ள பழமையான இந்த ரெயில் நிலையம் கடந்த 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி திறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி-புதுக்கோட்டை வழித்தடத்தில் முதன் முதலாக ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன்பின் புதுக்கோட்டை-மானாமதுரை வழித்தடத்தில் கடந்த 1930-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது புதுக்கோட்டை ரெயில் நிலையம் தமிழகம் மட்டுமில்லாமல் வட மாநிலங்களின் ரெயில் நிலையங்களையும் இணைக்கும் வகையில் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

முன்பதிவு பெட்டிகள்

திருச்சி, ராமேசுவரம், காரைக்குடி, சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, செங்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கும், புவனேஸ்வர், செகந்திராபாத் உள்பட வட மாநிலங்களின் ஊர்களுக்கும் ரெயில்கள் செல்கிறது. புதுக்கோட்டை வழியாக கடந்து செல்லும் இந்த ரெயில்களில் பயணிகள் ஏராளமானோர் புதுக்கோட்டையில் இருந்து பயணம் செய்கின்றனர்.

இதனால் பயணிகள் மூலம் ரெயில்வேக்கு வருவாய் அதிகம் கிடைக்கிறது. திருச்சி-காரைக்குடி வரையில் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு விட்டன. இதில் மின்சார என்ஜின் பொருத்திய ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து காரைக்குடி-ராமேசுவரம் வரை ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக பயணிகள் மத்தியில் உள்ளது. இது குறித்து பயணிகள் கூறியதாவது:-

புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக தினசரி செல்லும் ரெயில்களில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். ரெயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் உள்ள நிலையில் முதலாவது நடைமேடையில் மட்டும் ரெயில்கள் நின்று செல்கிறது. முதலாவது நடைமேடையில் முன்பதிவு பெட்டிகள் நிற்கும் இடத்தை காட்டும் ‘கோச் இன்டிகேசன் போர்டு’ இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் முன்பதிவு செய்து செல்லும் பயணிகள் தாங்கள் பயணிக்க கூடிய பெட்டி எந்த இடத்தில் நடைமேடையில் நிற்கும் என்பது தெரியாமல் தவிக்கின்றனர்.

இரு சக்கர வாகன நிறுத்துமிடம்

ரெயில் நிலையத்தில் அறிவிப்பு பலகையில் எழுதி போட்டிருப்பதை பயணிகள் அறிவதில் சிரமமாக உள்ளது. இதனால் கோச் இன்டிகேசன் போர்டை முதலாவது நடைமேடையில் அமைக்க வேண்டும். இதேபோல குடிநீர் குழாய்களில் குடிநீர் வருவது இல்லை. குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ரெயில் நிலையத்தில் கேண்டீன் வசதி ஏற்படுத்தலாம். முன்பதிவு கவுண்ட்டர்களில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதனால் முன்பதிவு செய்ய பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் அவதி அடைகின்றனர்.

ரெயில் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. அந்த இடத்தில் மேற்கூரை வசதி எதுவும் இல்லாததால் வாகனங்கள் வெயில், மழையால் பாதிப்படைகிறது. அதில் மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்கள் வந்து, புறப்படுவது தொடர்பான டிஜிட்டல் அறிவிப்பு பலகை ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் அமைக்க வேண்டும். இதுதவிர கூடுதலாக பயணிகள் ரெயில்கள் இயக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments