தமிழக சிறைகளில் இருந்து 75 கைதிகள் முன்கூட்டியே விடுதலை!!தமிழக சிறைகளில் இருந்து 75 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 700 தண்டனை கைதிகள் மனிதாபிமான அடிப்படையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதேபோல, 75-வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்கு உட்பட்டு விடுதலை செய்யலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலை செய்வது குறித்து அவர்களை அடையாளம் காண விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில், 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகள், நன்னடத்தையுடன் இருக்கும் கைதிகள் ஆகியோர் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் என அடையாளம் காணப்பட்டது.

அதேவேளையில், பாலியல் துன்புறுத்தல், முறைகேடு, வழிப்பறி, மோசடி, பயங்கரவாத குற்றங்கள், மாநிலத்துக்கு எதிரான குற்றங்கள், சிறையில் இருந்து தப்பித்தல், கள்ள நோட்டு தயாரித்தல், பெண்களுக்கு எதிரான குற்றம், வரதட்சணை மரணம், பொருளாதார குற்றங்கள், கள்ளச்சந்தை, கடத்தல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், விஷம் கலந்த பொருட்களை விற்பனை செய்தல், சாதி, மத ரீதியான வன்முறை ஆகிய குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை பெற தகுதியவற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

முன்விடுதலை அளிக்கப்படும் கைதிகளின் விவரங்களை சிறைத்துறை டி.ஜி.பி., சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி. உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இறுதி செய்யப்பட்ட கைதிகளை முன்விடுதலை செய்வதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்று கைதிகளை முன்விடுதலை செய்ய அனுமதி வழங்கியது.
இதில் பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள், மாநிலம் முழுவதும் உள்ள 9 மத்திய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏற்கனவே 40 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று 75 கைதிகள் விடுதலையாகினர்.

அதாவது புழல் மத்திய சிறையில் இருந்து 13 பேர், வேலூர் மத்திய சிறையில் இருந்து 2 பேர், கடலூர் மத்திய சிறையில் இருந்து 5 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து ஒருவர், கோவை மத்திய சிறையில் இருந்து 12 பேர், திருச்சி மத்திய சிறையில் இருந்து 12 பேர், மதுரை மத்திய சிறையில் இருந்து 22 பேர், புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் சீர்திருத்த பள்ளியில் இருந்து 4 பேர், புழல் பெண்கள் சிறையில் இருந்து 2 பேர், திருச்சி பெண்கள் சிறையில் இருந்து 2 பேர் என மொத்தம் 75 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்ய பரிந்துரை செய்யப்பட்ட பிற கைதிகள், அடுத்தடுத்த நாள்களில் விடுவிக்கப்படுவார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments