புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராத காட்சி கோபுரம், சிறுவர் பூங்கா கோடியக்கரை சுற்றுலா தலமாக்கப்படுமா?




மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காட்சி கோபுரம், சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் அப்பகுதியை சுற்றுலா தலமாக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கோடியக்கரை கடற்கரை

தமிழகத்தில் கடற்கரை அமைந்த மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டையாகும். வங்காள விரிகுடா கடலினை ஒட்டி 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இதில் மணமேல்குடி அருகே அமைந்துள்ளது கோடியக்கரை. கடற்கரை பகுதியான இங்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. குறிப்பாக சென்னை-கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையோரம் இந்த பகுதி அமைந்திருப்பதால் இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் கோடியக்கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து ரசித்தும், கடலில் குளித்தும் மகிழ்ச்சி அடைவார்கள்.

இதேபோல மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் ஆடி, தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் அதிகம் வருவது உண்டு. இதனால் இந்த கடற்கரை பகுதி எப்போதும், பரபரப்பாக காணப்படும். புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வருவது உண்டு. விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள்.

காட்சி கோபுரம்

கோடியக்கரை கடற்கரையோரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் கடந்த 2013-ம் ஆண்டு ரூ.13 லட்சம் செலவில் சுற்றுலா வரவேற்பு மையமும், கழிவறை மற்றும் உடை மாற்றும் அறையும், காட்சி கோபுரம் ரூ.15 லட்சம் செலவிலும் கட்டப்பட்டது. ஆனால் இவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமலேயே உள்ளது. இதேபோல சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. காட்சி கோபுரமானது அதில் ஏறி பொதுமக்கள் கடல் மற்றும் கடற்கரை பகுதியை சுற்றிபார்க்கும் வகையில் கட்டப்பட்டது. ஆனால் அதன் நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி கோடியக்கரை கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கோடி விநாயகர் கோவில்

கடற்கரையோரம் போதுமான இட வசதி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். மேலும் புதிதாக கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள காட்சி கோபுரம் மற்றும் சிறுவர் பூங்காவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இங்கு கோடிவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவில் கடலில் அமைந்ததை போன்ற அமைப்பை கொண்டதாகும். வேறு எங்கும் இதுபோன்ற விநாயகர் கோவில் இல்லை. தற்போது இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் பலர் இக்கோவிலில் வழிபாடு நடத்தி செல்வது உண்டு. எனவே கோடியக்கரை பகுதியை சுற்றுலாதலமாக அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments