தடை உத்தரவை தொடர்ந்து புதுக்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு ‘சீல்’ வைப்பு




தடை உத்தரவை தொடர்ந்து புதுக்கோட்டையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தடை உத்தரவு

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையின் காரணமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஆங்காங்கே அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் தெற்கு 2-ம் வீதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் 2.15 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் வருவாய்த்துறையினர் வந்திருந்தனர். டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராகவி, இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், ரமேஷ், முகமது ஜாபர் மற்றும் போலீசார் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

‘சீல்’ வைப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் இயங்கி வந்தது வாடகை கட்டிடமாகும். அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில் அந்த அமைப்பினர் மூலம் கதவை திறந்து அலுவலகத்தின் உள்ளே வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பார்வையிட்டனர். அதில் இருந்த பொருட்களை குறித்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து தடை உத்தரவின் காரணமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கிடையில் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பானது. சீல் வைப்பு குறித்து தகவல் அறிந்ததும் அவ்வமைப்பினர் சிலர் அங்கு வந்ததால் பரபரப்பு நிலவியது. ‘சீல்’ வைத்த பின் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments