மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேசிய புலனாய்வு முகமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்




தேசிய புலனாய்வு முகமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தீவிரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்ததாக குற்றச்சாட்டின்பேரில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. அதற்கு முன்னதாக அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.

இந்த நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள், முஸ்லிம் ஜமாஅத்துகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மனித நேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை மற்றும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மதுரையில் தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொது செயலாளரும், மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்துல் சமது தலைமை தாங்கினார். தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்கள் சேக் இப்ராகிம், சீனி அகமது முன்னிலை வகித்தனர்.






இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), வெங்கடேசன் (மதுரை), சுப்பராயன் (திருப்பூர்), பூமிநாதன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கனியமுதன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் உள்ளிட்டோர், மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து பேசினர்.

கோஷங்கள்

அப்போது, பா.ஜ.க. ஆட்சிக்கட்டிலில் ஏறியதில் இருந்து மக்களை பிரிப்பதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் செயல்களை மட்டும் செய்து வருவதாகவும்,. எதிர்கட்சிகளை பழிவாங்குவதற்காக வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மாநில கவர்னர்களின் அதிகாரம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும், ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக குரல் கொடுக்கும் ஜனநாயக அமைப்புகளை உள்துறை அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசப்பட்டது. மழை வெள்ளம், கொரோனா உள்ளிட்ட காலங்களில் பசித்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் துணையாக நின்றவர்களை, அமைப்புகளை தடை செய்தது கண்டிக்கத்தக்கது என்றும், வடமாநிலங்களில் நடந்த பல்வேறு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தேசிய புலனாய்வு முகமை மூலம் முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். முஸ்லிம்கள் குறிவைக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில், த.மு.மு.க. துணை செயலாளர் முகமது கவுஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, தனிப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பும் தீவிரமாக இருந்தது. பிற மாவட்டங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்துக்கு வந்த பலரை, மாவட்ட எல்லையிலேயே போலீசார் நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட எல்லைகளில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments