அசர வைக்கும் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு: உலக தரத்தில் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு
அசர வைக்கும் முத்துப்பேட்டை அலையாத்திக்காடு: உலக தரத்தில் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு

முத்துப்பேட்டை: அவர வைக்கும் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டை உலக தரத்தில் கொண்டு வர ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வசதிகளும் பூர்த்தியாகும். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்திக்காடுகள் ஆற்றின் வழியே படகில் நெடுதூரப் பயணம் மனதை சொக்க வைக்கும். இருபுறமும் அடர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு நம்மை மெய்மறக்க வைக்கும். உலக அளவில் இக்காடுகள் 2 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் ஏறத்தாள 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய காடுகள் 4827 சதுர கி.மீ பரப்பளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோர பகுதிகளிலும், அந்தமான் தீவு கூடங்களிலும் இக்காடுகள் வளர்கின்றன. இந்த அலையாத்தி மரங்களின் வேர்கள் இடையே உற்பத்தியாகும் மீன், நண்டு, இரால் அரிய வகையானது மிகவும் சுவையானது. இதில் அரியவகை மீன்களாக கருதப்படும் அதிக ருசிக்கொண்ட கொடுவா மீன், கூரை மீன், வெள்ளான் பொடி மீன் போன்ற பல்வேறு மீன்களின் இனப்பெருக்க பகுதிகளாக கடலோர சதுப்பு நிலக்காடுகள் விளங்குகின்றன. முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளால் ஜப்பான் போன்ற நாடுகளில் இயற்கை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக மரங்களின் வேர் பூமிக்கு அடியில்தான் செல்லும். ஆனால் அலையாத்தி காடுகளில் வேர்கள் பூமியில் இருந்து வானத்தை நோக்கி வந்திருப்பதை காணமுடியும். இதன் மூலம் உப்பு மற்றும் கெடுதல் காற்றுகளை உரிஞ்சி நல்ல காற்றாக மாற்றி அனுப்பும் ஒரு அதிசய வேராக அலையாத்தி வேர் உள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உப்பு படிமண் மக்களை பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நிலத்தடி நீரும் பெரும் அளவில் பாதிப்பில் இல்லை. முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டின் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை பல்வேறு வகை நீர்ப்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகை பறவைகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால் வாத்து, குளத்து கொக்கு, வெண்கொக்கு போன்றவை இப்பகுதிக்கு வருகின்றன. இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மரம் நடப்பாதைகள், உயரக் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுலா பயணிகள் எந்தவித அச்சமும் பயமும் இன்றி பயணம் செய்யலாம். அலையாத்தி காடுகள் சென்று வந்து முத்துப்பேட்டை மண்ணில் கால் வைத்ததும் மனதில் தோன்றுவது அடியாத்தி. இப்படி ஒற்றுமொத்த இயற்கை அழகை கொஞ்சும் இந்த அலையாத்திக்காடு 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு முதன் முதலில் தமிழகத்தை தாக்கிய பகுதி முத்துப்பேட்டையாகும்.

இந்த அலையாத்தி காட்டால் இப்பகுதியை தாக்கிய சுனாமியின் அலை தடுக்கப்பட்டு இப்பகுதி மக்களை காப்பாற்றியது. அதேபோல் 2018ம் ஆண்டு இப்பகுதியை தாக்கிய கஜா புயலை தாங்கிபிடித்து முத்துப்பேட்டை பகுதி மக்களை காப்பாற்றி வீழ்ந்த இந்த அலையாத்திக்காடு சுமார் 20ஆண்டுக்கு காட்டின் வளர்ச்சியை பின்தங்கியது. இந்த புயலால் 50சதவீதம் மரங்கள் சேதமாகியது. 50சதவீதம் மரங்கள் சாய்ந்தன. இதனையடுத்து அடுத்தடுத்த நாள்களில் வனத்துறையினர் தீவிரமாக சாய்ந்த மரங்களை நிமித்த செய்த முயற்சி எண்ணிலடங்காது. இந்நிலையில் கஜா புயலில் சேதமான மரங்களை மீட்டு எடுக்கவும், சேதத்தை சரி செய்யவும், புதிய மரங்களை உருவாக்கவும் தமிழக அரசு நபார்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தது, அந்த பணிகள் தற்போது திருவாரூர் மாவட்ட வன அலுவலர் அறிவொளி மேற்பார்வையில் முத்துப்பேட்டை வன அலுவலர் ஜெனனி முன்னிலையில் வனத்துறையினர் வன கூலித்தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் காட்டின் நடுவே உள்ள தூர்ந்து போன வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வரவழைத்து அலையாத்தி செடிகளை நடுதல், விதைகள் தெளிதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு மீண்டும் காட்டை பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் பணியில் வனத்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு அம்மாவாசை பவுர்ணமி நேரத்தில் கடல் நீர் அதிகரிகரிக்கும் அதனை கணக்கீட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது. அதேபோல் புயலில் சேதமான ஓய்வு குடிகள், மர நடைபாதைகளை சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அறிய அலையாத்திக்காட்டை உலக தரத்தில் கொண்டு வர சென்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. இதன் மூலம் இந்த ஆசியாவின் மிகப்பெரிய முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உலகத்தரத்திற்கு மின்ன இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில்: தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில் போதிய நிதி ஒதுக்கீடு செய்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனைப்படி கஜாவில் வீழ்ந்த காட்டை மீட்டெடுக்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது இதன் மூலம் காட்டின் வளர்ச்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும், அதேபோல் தமிழக அரசு சுற்றுல்லா மேம்பாடு நிதியிலும் ரூ.4 கோடி அளவில் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது.
அந்த நிதி வந்து பணிகள் நடைபெற்றால் ஓரளவு சுற்றுலா பயணிகளின் வசதிகளும் பூர்த்தியாகும் என்றார். அலையாத்திக்காட்டை உலக தரத்தில் கொண்டு வர சென்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments