தீபாவளியையொட்டி தமிழகத்தில் மொத்தம் 16,888 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தீபாவளியை முன்னிட்டு, அக்.21 முதல் 23-ம் தேதி வரை தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 4218 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,518 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி முடிந்த பின், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு, அக்.24ம் தேதி முதல் 26ம் தேதி வரை வரை தினமும் இயக்க கூடிய 2,100 பேருந்துகளுடன், 3062 சிறப்புப் பேருந்துகளும், ஏனையபிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3790 சிறப்புபேருந்துகள் என மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்படும்.


சென்னையில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படவுள்ளன. அதன்படி, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக செல்லும் பேருந்துகளும், கே.கே.நகர் பேருந்து நிலையத்தில்இருந்து ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் (வழி: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி) பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வடலூர், சிதம்பரம், கடலூர், புதுச்சேரி பேருந்துகளும் இயக்கப்படும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, திருப்பதி பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் சேலம், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர், ஊரப்பாக்கம் வழியாக இயக்கப்படும்.

கோயம்பேடு -10, தாம்பரம் சானடோரியம் - 1 என 11 முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். மேலும், www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி ஆகியவைகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 044-24749002, 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கும் மக்கள் செல்ல வசதியாக மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments