மன்னார்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன மழையில் நனைந்து சில மூட்டைகள் பாதிப்பு
மன்னார்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்தன. மழையில் சில மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

நெல் மூட்டைகள்

மன்னார்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு நேற்று காலை சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக வந்தன. இவை புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் அரவை மில்களுக்கு நெல் மூட்டைகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையில் மன்னார்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு சரக்கு ரெயில் புறப்பட்டு புதுக்கோட்டை நோக்கி வந்தது.

வருகிற வழியில் மழையின் காரணமாக வேகன்களில் கதவு ஓரமாக இருந்த நெல் மூட்டைகள் சில நனைந்து இருந்தன. ஆனால் இதில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும், உடனடியாக காய்ந்து விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்காக அனுப்பி வைக்கப்படும் நெல் மூட்டைகள் அரவைக்கு பின் பொதுவினியோக திட்ட குடோன்களில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரியில் இருந்து கீழே விழுந்தன

இந்த நிலையில் லாரிகள் மூலம் நெல் மூட்டைகள் அரவைக்காக ரெயில் நிலையத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் போது சில லாரிகளில் மூட்டைகள் சரியாக கட்டாமல் வைத்திருந்ததால் ஓரிரு மூட்டைகள் சாலையில் விழுந்தன. இதில் மழை நீரில் விழுந்தும் நெல் மூட்டைகள் பாதிப்படைந்தன. இவ்வாறு நெல் மூட்டைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments