புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் கட்டுமான பணி விரைவில் தொடங்குமா?




புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.

பஸ் நிலையம்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த பஸ் நிலைய வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் மேற்கூரையின் கான்கிரீட் தளம் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பஸ் நிலையத்தின் கட்டிட ஸ்திரதன்மையை நகராட்சி நிர்வாகம் சார்பில் வல்லுனர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அறிவுறுத்தினர்.





அறிவிப்பு பதாகை

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிற நிலையில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் கடை வியாபாரிகள், தொழிலாளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் சேதமடைந்த கட்டிடங்களை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

மேலும் பஸ் நிலையத்தில் சேதமடைந்த கட்டிடங்களின் அருகே பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டன. மேலும் தடுப்பு திரையும் போட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் தற்காலிகமாக பஸ் நிலையத்தை மாற்றவும், கடைகள் அமைத்து கொடுக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கட்டுமான பணியை விரைவில் தொடங்க கோரிக்கை

இதற்கிடையில் மழை காலம் தொடங்கிய நிலையில் கட்டிடத்தின் ஸ்திரதன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்றும், மாவட்டத்தின் தலைநகரமான புதுக்கோட்டையின் மையப்பகுதியில் அமைய உள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தை கூடுதல் அடிப்படை வசதிகளுடன் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

முகமது அலி ஜின்னா:- ‘‘புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்களில் சிமெண்டு பூச்சுகள் பல இடங்களில் பெயர்ந்து யார் தலையில் விழும் என்ற நிலையில் காணப்படுகிறது. எனவே புதிய கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்’’.

மங்கப்பன்:- ‘‘பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள், கடை வியாபாரிகளுக்கு பாதுகாப்பு முக்கியம். கடைகளின் மேற்கூரைகளில் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இதனை இடித்து விட்டு புதிய கடைகளை விரைவில் கட்ட வேண்டும். இந்த கட்டுமான பணியின் போது வியாபாரிகள் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’’. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments