அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 5 பேர் தேர்வு: சொந்த ஊர் திரும்பிய புதுக்கோட்டை மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த கோரிக்கை




    அரசு இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வாகி சொந்த ஊர் திரும்பிய புதுக்கோட்டை மாணவிகள் 5 பேருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

7.5 சதவீத இட ஒதுக்கீடு

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ‘நீட்’ தேர்வு மூலம் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இதற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி வைஷ்ணவிக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியிலும், மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கயல்விழிக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியிலும், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதிக்கு மதுராந்தகம் தனியார் கல்லூரியிலும் இடம் கிடைத்தது.

இதேபோல் கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுபாஷினிக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியிலும், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த பார்வதிக்கு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியிலும் படிக்க இடம் கிடைத்துள்ளது.

உற்சாக வரவேற்பு

கலந்தாய்வை முடித்துவிட்டு நேற்று 5 மாணவிகளும் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தேர்வு பெற்று கிராமத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மருத்துவ மாணவிகளை வரவேற்று அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ள மாணவிகள் கூறுகையில், எங்கள் கிராம மக்கள் அளித்த வரவேற்பு பெருமையாக உள்ளது. மருத்துவ படிப்பு கிராம பகுதி மாணவர்களுக்கு எட்டாக்கனி என்ற நிலை மாறி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வாகி உள்ள 5 பேரும் பெண்கள் என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்தினால் கிராம பகுதி மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவர் என தெரிவித்தனர்.

மிகப்பெரிய வரம்

இதுகுறித்து இலுப்பூரை சேர்ந்த மாணவி பார்வதி கூறுகையில், எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நான் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அருகே உள்ள எண்ணை அரசு நடுநிலைப்பள்ளியிலும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தேன்.

அரசு இடஒதுக்கீட்டில் என்னை போன்ற கிராம பகுதி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்தது மிகப்பெரிய வரம். மருத்துவ படிப்பை முடித்து விட்டு ஏழை, எளியோருக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பேன் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments