தீபாவளி பண்டிகையையொட்டி மீன்களின் விலை கிடுகிடு உயர்வு வவ்வால் மீன் கிலோ ரூ.800-க்கு விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. வவ்வால் மீன் கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விசைப்படகுகள்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து நேற்று கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்குவதற்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதியிலிருந்து வியாபாரிகள் குவிந்தனர். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீன் வியாபாரிகள், மீன்களை வாங்க குவிந்தனர்.

மீன்களின் விலை கிடுகிடு உயர்வு

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பலரும் மீன், நண்டு, இறால் போன்றவைகளை வாங்கி சமைப்பது வழக்கம். இதனால் பொதுமக்களும் மீன்களை வாங்கி செல்ல காலை முதலே மீன்பிடி தளத்தில் குவிந்தனர். மீன்களின் தேவை அதிகளவில் இருந்ததால் அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. பொதுவாக சாதாரண காலங்களில் ஒரு கிலோ வவ்வால் மீன் ரூ.500-க்கு விற்கப்படும். ஆனால் பண்டிகை காலம் என்பதால் வவ்வால் மீன் கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்டது.

அதேபோல் ரூ.350-க்கு விற்கப்பட்ட நண்டு கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.400-க்கும், ரூ.250-க்கு விற்பனையான கணவாய் மீன் கிலோ ரூ.350-க்கும் விற்பனையானது. இதேபோல் அனைத்து வகையான மீன்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments