சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு: அதிகாரிகளின் கடைக்கண் பார்வை வெள்ளாற்றின் மீது விழுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்புவெள்ளாற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீர்வு காண அதிகாரிகளின் கடைக்கண் பார்வை வெள்ளாற்றின் மீது விழுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

வெள்ளாற்றில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் பொது பணித்துறைக்கு சொந்தமான வெள்ளாறு உள்ளது. இந்த வெள்ளாற்றில் இருந்து ஆவுடையார்கோவில் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. வெள்ளாற்றின் அணைக்கட்டிலிருந்து பூவலூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் அணைக்கட்டு வரை ஆற்றில் இரு கரை வரைக்கும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளது.

இதனால் அதிகமான மழை பெய்யும் காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர் செல்ல முடியாமல் உள்ளது. அப்படி வெள்ளாற்றில் தண்ணீர் கூடுதலாக வரும்போது தண்ணீர் செல்ல முடியாமல் கரைபுரண்டு வயல் வெளிகளிலும், கரை ஓரத்தில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கோரிக்கை

கடந்த 1977-ம் ஆண்டு வெள்ளாற்றில் சீமைக்கருவேல மரங்கள் குறைவாக இருந்தபோதும் ஆற்றில் நிறைய தண்ணீர் வந்ததால் வயல்களிலும், வீடுகளிலும் சூழ்ந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது சீமைக்கருவேல மரங்கள் வெள்ளாறு முழுக்க மண்டிக்கிடக்கிறது. தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், மழை அதிகமாக பெய்து வெள்ளாற்றில் தண்ணீர் கரைபுரண்டு வரும் போது பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிடும். இதனால் வெள்ளாற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

உடனடியாக அகற்ற வேண்டும்

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அகற்ற வில்ைல என்றால் மழை அதிகமாக பெய்தால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வரும் போது, வயல்நிலங்களிலும், வீடுகளுக்குள்ளும் சென்று பெரும்பாதிப்பு ஏற்படும். இதனால் பொதுமக்கள் வீடுகளை இழந்து நிற்கும் நிலை ஏற்படும். இதனால் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறினார்.

விவசாயிகள் பாதிப்பு

தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் எம்.எஸ். கலந்தர் கூறுகையில், ஆவுடையார்கோவில் வெள்ளாற்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாவிட்டால் வெள்ளாற்றில் தண்ணீர் அதிகமாக வரும் போது, வயல் நிலங்களிலும், வீடுகளுக்குள் சென்று விடுகிறது. மேலும் வயல்களில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகின்றது. இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர் என்று கூறினார்.

மரங்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்

ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தை சேர்ந்த கோ.மாணிக்கம் கூறுகையில், வெள்ளாற்றில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பு திருமயத்திற்கு பிரசாரத்திற்கு வந்த போது தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் இடம் மனுக் கொடுத்திருந்தேன். அதற்கு அதிகாரிகளிடம் இருந்து பதில் வந்தது. அவர்கள் கூடிய விரைவில், சுத்தம் செய்து தருவதாக தபால் அனுப்பி இருந்தார்கள். தபால் வந்து ஒரு வருடத்திற்குமேல் ஆகிறது ஆனால் இதுவரை சுத்தம் செய்யவில்லை.

வெள்ளாற்றின் முழுவதும் ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி சுத்தம் செய்யவில்லை என்றால் அதிக மழை பெய்து வெள்ளாற்றில் தண்ணீர் அதிகமாக வரும் காலங்களில் அந்த சீமைக்கருவேல மரத்தின் வழியாக தன்ணீர்செல்ல முடியாமல் கரை புரண்டு சென்று கரை ஓரத்தில் உள்ள வயல்வெளியிலும், வீடுகளிலும் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் வெள்ளாற்றுக்குள் உள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றி சுத்தம் செய்யவேண்டும் என்று கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments