கோபாலப்பட்டிணத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்காமலே இணைப்பு வழங்கப்பட்டதாக பல லட்ச ரூபாய் மோசடி குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்!!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் 35 ஊராட்சிகள் உள்ளது. இதில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சில் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி தலைமையில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் துவங்கியது. ஊராட்சி எழுத்தர் சுமதி பஞ்சாயத்தில் உள்ள தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை மக்கள் மத்தியில் வாசித்தார். இதில் கிராம ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம் திட்ட பணிகள் சம்பந்தமாகவும், ஊரகப் பகுதியில் மழை நீர் சேகரிப்பது சம்பந்தமாகவும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் முறைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சம்பந்தமாகவும், அனைத்து ஊரக அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு மக்கள் மத்தியில் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

குறிப்பாக கோபாலப்பட்டிணத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் சுமார் 120 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்காமலே இணைப்பு வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பல லட்ச ரூபாய் மோசடி குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து சாலைகளும் செப்பனிட வேண்டும் போன்றவை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கோபாலப்பட்டிணம் மற்றும் பாதரக்குடி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் புதிய குடிநீர் இணைப்புகள் மொத்தம் 178 வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் பாதரக்குடியில் 58 இணைப்புகளும், கோபாலப்பட்டிணத்தில் 120 இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில்  பாதரக்குடியில் மட்டும் 58 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments