அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக செல்லும் செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலை நிரந்தர ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும் பயணிகள் வலியுறுத்தல் 


செகந்திராபாத்-ராமேசுவரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலை நிரந்தர ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.சிறப்பு ரெயில்

தென் மத்திய ரெயில்வே சார்பில் செகந்திராபாத்தில் இருந்து ராமேசுவரம் வரை 24.8.2022 முதல் 28.12.2022 வரை சிறப்பு விரைவு ரெயில் இயக்க திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் புதன்கிழமை இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

தொடர்ந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் வழியாக பட்டுக்கோட்டைக்கு மாலை 4.50 மணிக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேசுவரத்திற்கு வியாழக்கிழமை இரவு 11.40 மணிக்கு சென்றடைகிறது. 

மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 8.50 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு மதியம் 1.13 மணிக்கு வந்தடைகிறது. இதே மார்க்கத்தில் சென்னை எழும்பூருக்கு இரவு 9.50 மணிக்கு சென்றடைகிறது. தொடர்ந்து செகந்திராபாத்திற்கு சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு சென்றடைகிறது.

பகல் நேரத்தில்...

அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல ரெயில் பாதையில் சென்னைக்கான ரெயில் சேவை 2006-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இரவு நேர ரெயில்வே கேட்டுகளுக்கு பணியாட்கள் நியமிக்கப்படாததன் காரணமாக சென்னைக்கான இரவு நேர விரைவு ரெயில் சேவை 16 ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த செகந்திராபாத்-ராமேசுவரம் விரைவு ரெயில் காலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு பகல் நேரத்தில் திருவாரூர், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு வருகிறது.

பெரும் உதவி

சென்னைக்கான ரெயில் வசதி இல்லாத திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி அகல ரெயில் பாதையில் உள்ள மக்களுக்கு இந்த வாராந்திர விரைவு ரெயில் பெரும் உதவியாக இருந்து வருகிறது.

செகந்திராபாத், சென்னை போன்ற பகுதியில் இருந்து பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு பகலில் வருவதற்கும் இப்பகுதி மக்கள் சென்னை, செகந்திராபாத் செல்வதற்கும் வசதியாக இருக்கிறது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், சென்னையில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோர், ராமேசுவரம் கோவிலுக்கு ஆன்மிக யாத்திரை செல்வோருக்கு இந்த ரெயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த வாராந்திர சிறப்பு ரெயிலை தென் மத்திய ரெயில்வே நிரந்தர ரெயிலாக சாதாரண கட்டணத்தில் தொடர்ந்து இயக்க வேண்டும் என ரெயில் பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கோரிக்கை மனு

இதுகுறித்து தென் மத்திய ரெயில்வேக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் தென் மத்திய ரெயில்வே மேலாளர், தெற்கு ரெயில்வே மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

பட்டுக்கோட்டை பகுதி மக்களுக்கு செகந்திராபாத்- ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு ரெயில் பயனுள்ள வகையில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை எழும்பூருக்கு அடுத்து செங்கல்பட்டு சந்திப்பில் தான் நின்று செல்கிறது. தாம்பரத்தில் இந்த விரைவு ரெயில் நின்று செல்லவில்லை.

நிரந்தர ரெயிலாக...

தாம்பரத்தில் இருந்து அதிக பயணிகள் இந்த ரெயிலில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது. தாம்பரத்தில் இந்த ரெயில் நின்று சென்றால் பெரும்பாலான ரெயில் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரெயில்வேக்கும் அதிக வருவாய் கிடைக்கும்

எனவே 28.12.2022 வரை இயக்க திட்ட மிடப்பட்டுள்ள செகந்திராபாத்-ராமேசுவரம்- செகந்திராபாத் வாராந்திர சிறப்பு விரைவு ரெயிலை நிரந்தர விரைவு ரெயிலாக சாதாரண பயண கட்டணத்தில் இயக்க வேண்டும். மேலும் இந்த ரெயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினத்தந்தி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments