வடக்கு அம்மாபட்டினத்தை சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது! மற்றொருவருக்கு போலீசார் வலைவீச்சு!!



வடக்கு அம்மாபட்டினத்தை சேர்ந்த தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வடக்கு அம்மாபட்டினத்தை சேர்ந்தவர் அப்துல்ரஜாக் (வயது 50). தொழிலாளி. இவர், தீபாவளியன்று மணமேல்குடி அருகே கண்டனிவயலில் உள்ள கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில் வடக்கு அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்த இப்ராம்ஷா (42), சேட்டு (48) ஆகிய இருவரும் அப்துல்ரஜாக்கை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- இப்ராம்ஷா, சேட்டு ஆகிய இருவரும் சகோதரர்கள். இப்ராம்ஷா மரம் அறுவை தொழிலுக்கு சென்று வந்துள்ளார். மேலும் அவர் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளது. இப்ராம்ஷாவிடம், அப்துல்ரஜாக் ரூ.6 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி இப்ராம்ஷா கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் இப்ராம்ஷாவை தகாத வார்த்தைகளால் அப்துல் ரஜாக் திட்டியுள்ளார்.

இப்ராம்ஷா அவரது சகோதரர் சேட்டுவிடம் தெரிவித்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து அப்துல் ரஜாக்கை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்று சகோதரர்கள் இருவரும் அப்துல்ரஜாக்கை செல்போனில் தொடர்பு கொண்டு மது அருந்துவதற்காக வரும்படி அழைத்தனர். அதற்கு அப்துல்ரஜாக் மாலை வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மணமேல்குடி அருகே உள்ள ஒரு பாரில் 3 பேரும் மது அருந்தினர். மது அருந்திவிட்டு மது கடையின் வாசலில் 3 பேரும் பேசிக் கொண்டிருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தொழிலாளி அப்துல் ரஜாக்

இந்நிலையில் 3 பேரும் அப்துல் ரஜாக் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாஜிப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அப்துல்ரஜாக் ஓட்டினார். கண்டனிவயல் கண்மாய் பகுதியில் வந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது இப்ராம்ஷா மற்றும் சேட்டு ஆகிய இருவரும் சேர்ந்து அப்துல்ரஜாக்கை பலமாக தாக்கினர். இதில் இப்ராம்ஷா மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து அப்துல்ரஜாக்கின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் 2 பேரும் சேர்ந்து அப்துல்ரஜாக் கழுத்தை துண்டால் இறுக்கி கொன்று விட்டு அவரது உடலை கண்மாயில் வீசி சென்றனர்.

இந்நிலையில், மணமேல்குடி போலீசார் அப்துல்ரஜாக்கின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவரது செல்போனில் இருந்து 15 முறை இப்ராம்ஷா செல்போன் நம்பருக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் இப்ராம்ஷாவை விசாரிக்க சென்றபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் 3 பேரும் தீபாவளி அன்று மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சேட்டு

இதையடுத்து சேட்டுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துல்ரஜாக்கை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து சேட்டுவை கைது செய்தனர். தலைமறைவான இப்ராம்ஷாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments