பட்டுக்கோட்டை டு திருச்சி விபத்தில் துண்டான கையை இணைக்க 100கீமி 1:05 நிமிடத்தில் விரைவாக மருத்துவமனை கொண்டு சேர்த்த மதுக்கூர் தமுமுக ஆம்புலன்ஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பெண் ஒருவரின் கை துண்டான நிலையில், அவரை ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் திருச்சி அழைத்துச் சென்றுள்ளார் தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.

பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரமாவது ஆகக் கூடும் என்ற நிலையில், மிகத் துணிச்சலாகவும் சாதுர்யமாகவும் ஆம்புலன்ஸை இயக்கியுள்ளார் ஓட்டுநர் ராசிக்.

இது தொடர்பான விவரம் வருமாறு;

துண்டான கை
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே நேற்று காலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் இந்திராணி என்பவரின் கை முழுவதுமாக துண்டானது. இதையடுத்து அவர் மீட்கப்பட்டதுடன் விபத்தில் துண்டாகி கிடந்த கையையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இந்திராணிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், துண்டான கையை இணைக்க வேண்டும் என்றால் இரண்டரை மணி நேரத்திற்குள் திருச்சிக்கு மேல்சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தமுமுக ஆம்புலன்ஸ்

இதையடுத்து மதுக்கூர் கிளை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, விபத்தில் கையை இழந்த இந்திராணி திருச்சி அனுப்பி வைக்கப்பட்டார். கூடவே துண்டாகி கிடந்த இந்திராணியின் கையும் பாதுகாப்பான முறையில் திருச்சி எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டரை மணி நேரத்திற்குள் திருச்சி செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசிக் அகமது ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் திருச்சி சென்றடைந்தார்.

மருத்துவர்கள் பாராட்டு

இதனிடையே திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணிக்கு உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்து துண்டான கையை ஒட்ட வைத்துள்ளது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசிக் அகமதுவின் துணிச்சலான இந்த நடவடிக்கையை அறிந்த மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். இதேபோல் விபத்தில் கையை இழந்த இந்திராணியின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர்.

மனிதநேய சேவை

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை பல இடங்களில் கட்டணமின்றி ஆம்புலன்ஸ் சேவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வின் போது கூட மனிதநேய அடிப்படையில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியதாக அருணா ஜெகதீசன் ஆணையமே பாராட்டவும் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுமை ஆட்டோக்கள் மோதல்:6 பெண்கள் பலத்த காயம்

பட்டுக்கோட்டை அருகே இரண்டு சுமை ஆட்டோக்கள் வியாழக்கிழமை மோதிக் கொண்டதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.

பட்டுக்கோட்டை அருகே உள்ள உலையகுன்னம் கிராமத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை சுமை ஆட்டோ மூலம் புலவஞ்சி கிராமத்துக்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனா். அப்போது, பழைய மதுக்கூா் அருகே சென்றபோது திடீரென எதிரே வந்த மற்றொரு சுமை ஆட்டோ எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதியது.

இதில், உலயக்குன்னம் கிராமத்திலிருந்து வந்த ஆறு போ் காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இவா்களில் இந்திராணி என்ற பெண் கை துண்டிக்கப்பட்ட நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும் கஸ்தூரி என்ற பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உணா்வு இல்லாத நிலையிலும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். மற்ற நால்வருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடா்பாக மதுக்கூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments