வங்கிக் கணக்கை தொடங்கும் ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் நம்பரை கேட்கக்கூடாது உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு




    வங்கிக் கணக்கை தொடங்கும் ரேசன் அட்டைதாரர்களிடம் ஆதார் நம்பரை கேட்க வேண்டாம் என்று உணவுத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை என்பதால் அவர்களுக்கு வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதில், இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ‘ஜீரோ பாலன்ஸ்’ (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கலெக்டர்களுக்கு உத்தரவு

இந்தநிலையில் உணவு பொருள் வழங்க மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், மாவட்ட கலெக்டர்களுக்கு நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், புதிய வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக அருகில் உள்ள கூட்டுறவு வங்கியின் விண்ணப்பத்தை அவர்களின் ரேசன் கடையில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

ஏற்கனவே வங்கிக் கணக்கு இருந்தால் (ஆதார் எண் இணைக்கப்படாதவை), அந்த ரேசன் அட்டைதாரர்கள் அந்த வங்கிக்குச் சென்று அவர்களின் ஆதார் நம்பரை இணைக்க அறிவுறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அருகில் உள்ள கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கியிலோ புதிய கணக்கை தொடங்கி, அதில் ஆதார் நம்பரை இணைத்து, அந்த விவரங்களை தங்களின் ரேசன் கடையில் தெரிவிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.

வாங்க வேண்டாம்

அந்த வகையில், ரேசன் அட்டைதாரரின் ஆதார் நம்பரை எந்தக் காரணத்தைக் கொண்டும் துறை அலுவலர்கள் கேட்கவோ, ஆதார் அட்டையின் நகலை பெறவோ கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments