புதுக்கோட்டையில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?




புதுக்கோட்டை நகரில் மாலை நேர உழவர் சந்தைக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காய்கறிகள்

புதுக்கோட்டை நகரில் சந்தைப்பேட்டையில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்கள், காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. காலையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இதனால் இந்த உழவர்சந்தையில் காலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதால் பொதுமக்களும் ஆா்வத்தோடு வாங்கி செல்வார்கள். குறிப்பாக பண்டிகை காலங்களில் காய்கறிகள் விற்பனை அதிகமாக இருக்கும்.

மாலை நேர உழவர் சந்தை

இந்த நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தை மாலை நேரம் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் சோதனை அடிப்படையில் மாலை நேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும். இங்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பால், பஞ்ச காவ்யம், சிறுதானியங்கள், சூப் வகைகள், தென்னங்கன்றுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 8 கடைகள் இயங்கி வருகிறது. ஆனால் பொதுமக்கள் வருகை குறைவாக உள்ளது.

மாலை நேர உழவர்சந்தை இயங்குவது குறித்து தெரிந்த ஒரு சில நபர்கள் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். மாலை நேர உழவர் சந்தை இயங்குவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை.

கடைகளை அதிகரிக்க வேண்டும்

மாலை நேர உழவர் சந்தையில் பொதுமக்கள் அதிகம் வரும் வகையில் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களோடு கூடுதல் பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். காலை நேரத்தை போல் மாலையிலும் காய்கறிகள் விற்பனை நடைபெற்றால் பொதுமக்களிடம் வரவேற்பை பெறும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி மாலை நேர உழவர்சந்தைக்கு வரவேற்பு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments