நெய்தலும் முல்லையும் சந்தித்துக் கொள்ளும் மணமேல்குடி பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் பயிர்கள் கருகும் அவலம்




காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மணமேல்குடியில் போதிய அளவு மழை இல்லாததால் பயிர்கள் கருகும் அவலநிலை உள்ளது. எனவே நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய வேலைகள் முடிந்தது

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா 36 கிலோ மீட்டர் நீண்ட கடற்கரையும், அதன் மேற்கே விவசாயம் சார்ந்த பகுதியாகவும் அமைந்துள்ளது. நெய்தலும் முல்லையும் சந்தித்துக் கொள்ளும் சங்கமாக இப்பகுதி திகழ்கிறது. விவசாயத்தை பொறுத்தவரை மணமேல்குடி தாலுகாவில் மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், சிங்கவனம், பெருமருதூர் ஆகிய 4 வருவாய் பகுதியாக உள்ளது.

இதில் 29 வருவாய் உள்வட்டமும், 72 வருவாய் கிராமங்களும் உள்ளது. 9,069 எக்டேர் நஞ்சை நிலங்களும், 3,958 எக்டேர் புஞ்சை நிலங்களும் உள்ளன.

இதில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் நாகுடி பிரிவு காவிரி கடைமடை பகுதியாக பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி கிராமங்கள் பாசன பகுதியாக உள்ளது. மீதமுள்ள தெற்கு பகுதி 18 ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாக ஏரி பாசன விவசாய பகுதியாக உள்ளது. வடக்கு பகுதி காவிரி கடை தண்ணீரால் ஓரளவு தட்டுப்பாடு இல்லாமல் விவசாய வேலைகள் நடந்து முடிந்து விட்டது.

குறைவான தண்ணீரை வைத்து பாசனம்

மணமேல்குடியில் இருந்து கோட்டைப்பட்டினம் வரை உள்ள பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் கடும் பற்றாக்குறையாக உள்ளது. மேலும் பருவமழை பொய்த்து விட்ட காரணத்தினால் விவசாய வேலைகள் பார்த்தும் பார்க்காமலும் மழை பெய்யுமா? பெய்யாதா? என்று ஏக்கத்தோடு தினசரி வானத்தை பார்த்து மழை பெய்யும் என்ற ஒரு எதிர்பார்ப்போடு விவசாயிகள் இருக்கிறார்கள்.

ஏரியில் இருந்த கொஞ்சம் தண்ணீரை வைத்து எப்படியாவது பயிர்கள் முளைத்துவிடும் என்ற முயற்சியோடு பக்கத்து கிராமங்களில் இருந்து போதிய அளவுள்ள தண்ணீர் வரவழைத்து பாசனத்திற்கு பயன்படுத்தினார்கள்.

பயிர்கள் கருகியது

தற்போது விவசாயிகள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டனர். மேலும் பயிர்கள் கருகிய நிலைக்கு வந்துவிட்டது. சில மக்கள் தங்களின் நிலங்களில் ஆடு மாடுகளை கொண்டு பயிர்களை மேய்ச்சலுக்கு விடும் முடிவுக்கு வந்து விட்டனர். அதில் சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வந்து விட்டு விட்டனர். மழையை எதிர்பார்த்து எதிர்பார்த்து சாகுபடி செய்த பயிர்கள் கருகிய நிலைக்கு ஆகிவிட்டது. அதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவு திட்டமான காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் முழுமையாக நிறைவேற்றினால் மட்டுமே இவர்களின் தண்ணீர் பிரச்சினை தீரும்.

மேலும் இந்த திட்டம் எப்போது நிறைவேறும் என்று புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். மணமேல்குடி தாலுகாவில் கருகிய பயிர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அதிகாரிகள் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் உள்ளிட்டோர் கூறிய கருத்துகள் வருமாறு:-

காவிரி, வைகை, குண்டாறு திட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன்:-

மணமேல்குடி தெற்கு ஒன்றிய பகுதியில் 18 ஊராட்சியில் இதே நிலை நீடித்து வருகிறது. விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிரிட்டு போதிய அளவு மழை இல்லாமல் பயிர்கள் கருகி ஆடு, மாடுகளை கொண்டு மேய்க்கும் நிலை ஏற்படுகிறது. இந்த பகுதியில் காவிரியை மணமேல்குடி தாலுகாவில் விரிவு படுத்தப்பட்ட பாசன பகுதிகளை உருவாக்கி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பாசன பகுதியாக மாற்ற முடியும். அதற்கு நீண்ட நாள் கனவு திட்டமாகிய காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயல்படுத்த வேண்டும்.

தண்ணீரை பணம் கொடுத்து வாங்குகிறோம்

கொடிக்குளத்தை சேர்ந்த விவசாயி செல்லத்துரை:-

எங்கள் பகுதியில் விவசாயம் கடந்த 5 வருடத்திற்கு மேலாக வானம் பார்த்த பூமியாக உள்ளது. மழையை நம்பியே நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் நெல் பயிர்கள் விதைத்து அதற்கு தேவையான தண்ணீர் வசதி மழை நீரில் கிடைக்காத நேரங்களில் பக்கத்தில் கிராமங்களில் குளங்களில் உள்ள தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி அந்த நெல்களை விளைவிக்க நேரிடுகிறது. இவ்வாறு பணம் விரையம் செய்தும் எங்களால் எங்கள் பகுதியில் விவசாயத்தை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காப்பீடு தொகை கிடைக்க...

ரெட்டையாளத்தை சேர்ந்த விவசாயி அல்லா பிச்சை:-

எங்கள் பகுதியில் நாங்கள் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்கின்றோம். மேற்கொண்டு தற்போது உரம், பூச்சி மருந்து விலை கடுமையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். அப்படி செய்தும் எங்கள் பகுதியில் தண்ணீர் வசதி சரிவர விவசாயத்திற்கு இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனே அரசு நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதிக்கு உரிய நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments