ஆவுடையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம் மற்றொரு தரப்பினர் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு




ஆவுடையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினர் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

ஆவுடையார்கோவில் அருகே உள்ள வரிக்குடியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளூர், வடக்கூர், கொங்கரான்வயல், கோணரியேந்தல் ஆகிய கிராம மக்கள் அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது.

போட்டி போராட்டம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் கரூர் கடைவீதியில் செயல்பட்டு வரும் மற்றொரு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ், அறந்தாங்கி கலால் உதவி மேலாளர் கருப்பையா, ஆவுடையார்கோவில் ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தகுமாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் திறக்க வேண்டும் அல்லது 2 கடைகளையும் மூட வேண்டும் என்று கூறினர்.

இதனைதொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 2 கடைகளையும் போலீஸ் பாதுகாப்புடன் திறக்க அனுமதி அளித்தனர். பின்னர் 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments