தீபாவளி சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.96 கோடி வருமானம்: RTI மூலமாக வெளியான தகவல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலுக்கும் கூடுதல் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை




தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ.2.96 கோடி வருவாய் கிடைத்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த அக். 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வழக்கமான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்த நிலையில், பயணிகள் வசதிக்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலமாக கிடைத்த வருமானம் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், தெற்குரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான பாண்டியராஜா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தெற்கு ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது. அக். 18-ம் தேதி முதல் நவ. 3-ம் தேதி வரை மொத்தம் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 19 ரயில்கள் தெற்கு ரயில்வே மூலமாகவும், 15 ரயில்கள் மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரயில்வே எல்லைக்கு உள்ளேயும் இயக்கப்பட்டன.



பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், திருச்சி, கொச்சுவேலிக்கு இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேசுவரம், எர்ணாகுளம், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

அதேபோல திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூரில் இருந்து பெங்களூருவுக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து மைசூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூரு, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் - திருநெல்வேலி இடையே இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.22.43 லட்சம், திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே இரு மார்க்கங்களிலும் சேர்த்து ரூ.22.30 லட்சம், தாம்பரம் - நாகர்கோவில் இடையே ரூ.18.20 லட்சம், கொச்சுவேலி-தாம்பரம் இடையே ரூ.17.71 லட்சம், எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையே ரூ.17.01 லட்சம், தாம்பரம் - திருநெல்வேலி இடையே ரூ.11.56 லட்சம், சென்னை - ராமேசுவரம் இடையே இயக்கப்பட்ட ரயில் மூலம் ரூ.11.29 லட்சம், திருச்சி - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட ரயில் மூலம் ரூ.2.62 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

ஒரு மார்க்கத்தில் நாகர்கோவில் - பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட ரயில் மூலம் ரூ.9 லட்சம், திருநெல்வேலி - தானாப்பூருக்கு இயக்கப்பட்ட ரயில் மூலம் ரூ.53.80 லட்சம் (இரு சேவைகள்) வருமானம் கிடைத்துள்ளது.

இதுதவிர, மற்ற மண்டலங்கள் மூலமாக இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் ரூ.1 கோடி கிடைத்துள்ளது. அனைத்து சிறப்பு ரயில்களையும் சேர்த்து மொத்தம் ரூ.2.96 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் இயக்கப்படாத ஓரிரு சிறப்பு ரயில்கள் தவிர, அனைத்து சிறப்பு ரயில்களும் முழுமையாக நிரம்பின. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா கூறியபோது, ‘‘தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு சுமார் ரூ.3 கோடி வருவாய் கிடைத்துள்ளது. எனவே, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்படும் டிசம்பர், ஜனவரியிலும் சிறப்பு ரயில்களை இயக்கினால், தெற்கு ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும்.

குறிப்பாக, நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல்சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றிஆலோசனை நடத்தி, முடிவு செய்யப்படும். பயணிகள் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’’ என்றார்.

நன்றி : தி ஹிந்து தமிழ் 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments