‘இந்தோ-சாராசெனிக்’ கட்டமைப்பில் உருவான தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கல் கட்டிடம் நேற்றுடன் 100 வயதை எட்டியிருக்கிறது. 100 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகம்
பாரம்பரிய, பழமை வாய்ந்த கட்டிடங்களுக்கு என்றுமே மவுசு குறையாது. அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில், பழமையான கட்டிடங்கள் ஏராளம் இருக்கின்றன. சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்கள், மாநகராட்சி ரிப்பன் கட்டிடம் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் வரும் ஒரு கட்டிடம்தான், தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக கட்டிடம் ஆகும்.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அருகிலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேர் எதிரிலும் பழங்கால அடையாளத்தை சுமந்தபடி கம்பீரமாக நிற்கும் இந்த கட்டிடம், நேற்றுடன் 100-வது வயதை தொட்டு இருக்கிறது. அப்படியே 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இந்த கட்டிடத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்க்கலாம்.
1908-ம் ஆண்டில் மெட்ராஸ்-தெற்கு மராட்டா ரெயில் நிறுவனம், மெட்ராஸ் ரெயில்வேயின் ரெயில் பாதைகளை இணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையகத்துக்காக கடந்த 1915-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி அப்போதைய மெட்ராஸ் கவர்னர் லார்ட் பென்ட்லேண்ட்டால் அடித்தளம் போடப்பட்டது.
‘இந்தோ-சாராசெனிக்’ வகை கட்டமைப்பு
கட்டிட கலைஞரான என்.கிரேசன் என்பவரால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டு, பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் டி.சாமிநாதபிள்ளையால் கட்டப்பட்டது. இது உன்னதமான திராவிட கட்டிடக்கலையின், இந்தோ-சாராசெனிக் வகை கட்டமைப்பு ஆகும்.
இந்த கட்டிடத்தின் அடித்தளம் தரைமட்டத்தில் இருந்து 5 முதல் 8 அடி வரை வலுவான கான்கிரீட்டும், சுமார் 20 அடி ஆழத்துக்கு தூய மணல் அடுக்கும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 500 டன் இரும்பு கம்பிகளுடன், 10 ஆயிரம் டன் கான்கீரிட் பதிக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் அடித்தளம் உருவாக்க சுமார் 7½ ஆண்டுகள் ஆகியுள்ளன.
கட்டிடத்தின் மேல் பகுதி போர்பந்தர் கற்கள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டு இன்றளவும் அசைத்து பார்க்க முடியாத நிலையில், நேர்த்தியாக அப்போது கட்டியிருக்கின்றனர். இதற்கு தேவையான போர்பந்தர் கற்கள் குஜராத்தில் இருந்து குவாரிகள் கற்கள் எடுப்பதில் சிறந்தவர்களான எச்.எச்.வாடியா, மான்சர்ஸ் ஷா எச் வாடியா ஆகியோரால் இங்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
சுமார் 8 ஆண்டுகளாக கடல் வழியாக கேரளாவுக்கும், பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் சென்னைக்கும் கொண்டுவரப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு பயணத்துக்கு பின்னர்தான், இந்த கற்கள் கட்டிடத்துக்கு மாலையாக சூட்டப்பட்டு, கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
1922 டிசம்பர் 11-ந் தேதி...
அதிலும், கட்டிடத்தின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும் கோபுரங்கள் 1 லட்சத்து 32 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டவை ஆகும். அந்த அளவுக்கு பெரிய கோபுரங்களை கனகச்சித்தமாக, இப்போதும் பார்த்து வியக்கும் அளவுக்கு தூக்கி நிமிர்த்தி இருக்கின்றனர்.
இதன் முகப்பு மத்திய கோபுரம் ஏறெடுத்து பார்க்கும் அளவுக்கு தரைத்தளத்தில் இருந்து 125 அடி 6 அங்குலம் உயரம் கொண்டது ஆகும். இப்படியாக இப்போதும் பேசக்கூடிய வரலாற்றை சுமந்து நிற்கும் இந்த கட்டிடம், ரூ.30 லட்சத்து 76 ஆயிரத்து 400 செலவில் 3 அடுக்கு கட்டிடமாக அப்போது கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய கவர்னரின் மனைவி லேடி விலிங்டனால் 1922-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி திறந்துவைக்கப்பட்டது.
முதலில் இந்த கட்டிடத்தில் மெட்ராஸ் மற்றும் தென் மராட்டா ரெயில்வே நிறுவனத்தின் தலைமையகம்தான் இயங்கியது. பின்னர், இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனம் கொண்டுவரப்பட்டு, 1951-ம் ஆண்டில் மெட்ராஸ் மற்றும் தென் மராட்டா ரெயில்வே நிறுவனத்துடன், தென்னிந்திய ரெயில்வே மற்றும் மைசூர் மாநில ரெயில்வே ஆகியவை இணைக்கப்பட்டு தெற்கு ரெயில்வேயாக மாறியது.
நேற்றுடன் 100 வயது
அன்றில் இருந்து இன்று வரை தெற்கு ரெயில்வேயின் தலைமையகமாகவே இந்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இங்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகம், இயக்கக அலுவலகம், வர்த்தக பிரிவு அலுவலகம், நிதிப்பிரிவு அலுவலகம், தொழிலாளர் நலப்பிரிவு அலுவலகம் என 18 பிரிவுகளில் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் 1,500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த கட்டிடத்தை சிறப்பிக்கும் வகையில், அதன் நூற்றாண்டை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி சிறப்பு தபால் உறைகள் வெளியிடப்பட்டன. 1922-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதி திறக்கப்பட்ட இந்த கட்டிடம், நேற்றுடன் தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறது. இதையொட்டி, அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கட்டிடத்துக்கு முன்பு நின்று ‘செல்பி' எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
வழக்கமாக இதுபோன்ற நிகழ்வுகளின் போது, குறிப்பிட்ட கட்டிடங்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கப்பட்டு, பார்ப்பவர்கள் எதற்காக அலங்கரித்து இருக்கிறார்கள்? என்று கேட்கும் வண்ணம் ஏற்பாடு இருக்கும். ஆனால் நூற்றாண்டு கண்ட இந்த கட்டிடத்துக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் அதுபோல் எதுவும் செய்யப்படாமல் இருந்தது, சற்று வருத்தம்தான்.
100 ஆண்டுகளாக இன்றும் துளிகூட சேதாரம் இல்லாமல், ‘வந்து பார்... என்று நெஞ்சை நிமிர்த்தி காட்டும் வகையில் கம்பீரமாக நிற்கும்' தெற்கு ரெயில்வே கட்டிடம், இன்றல்ல, எப்போதுமே ஆச்சரியத்தை கொடுத்து கொண்டேதான் இருக்கும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.