மணமேல்குடியை வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் சின்னத்துரை எம்.எல்.ஏ. கோரிக்கை
மணமேல்குடி தாலுகா செய்யானம், மஞ்சக்குடி, பாலையூர், குமரப்பன்வயல், கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். ஆனால் விவசாயம் செய்து 100 நாட்களை கடந்த நிலையில் போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகின. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் நெற்பயிர்களில் மாடுகளைவிட்டு மேய்க்க விட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மணமேல்குடி, செய்யானம், மஞ்சக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. மணமேல்குடி பகுதிக்கு ஆற்றுப்படுகையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு வாய்க்கால் வசதி இருக்கிறது. எனவே இப்பகுதியில் முறையாக தண்ணீர் கொடுத்தால் மணமேல்குடி பகுதி முழுவதும் விவசாயம் சிறப்பாக செய்ய முடியும்.

இங்குள்ள செய்யானம் ஏரியை தூர்வாரி தண்ணீர் கொடுத்தால் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய முடியும். தற்போது 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்து இருக்கக்கூடிய வயல்கள் முழுவதும் அழிந்து கொண்டிருக்கிறது. எனவே மணமேல்குடி பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து இப்பகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மணமேல்குடி பகுதியில் உள்ள ஏரி, கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments