குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம்: இறையூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரணை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை அழைத்துச்சென்று சாமி கும்பிட வைத்த கலெக்டர்




குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம் தொடர்பாக இறையூர் கிராமத்தில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினர். அப்போது இரட்டைக்குவளை முறையை பின்பற்றிய டீக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சிறுவர்-சிறுமிகளுக்கு ஒவ்வாமை

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக வேங்கைவயலில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் 3 சிறுமிகளுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு, அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், இதில் ஒரு சிறுமி தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தொட்டியில் அசுத்தம்

இதையடுத்து, அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்சினை இருக்கலாம் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நேற்று நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தபோது, அந்த தொட்டியில் உள்ள தண்ணீர் அசுத்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். இதையடுத்து அங்கு அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் சின்னதுரை எம்.எல்.ஏ., குளத்தூர் தாசில்தார் சக்திவேல் ஆகியோர் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி மக்களுக்கு வேறு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வெள்ளனூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் நேரில் விசாரணை

இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமம் வேங்கைவயல் தெருவில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அந்தப்பகுதி மக்களுக்காக அமைக்கப்பட்ட மருத்துவ முகாமை பார்வையிட்டு முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு யார் மீதும் சந்தேகம் உள்ளதா?, யாராவது புதிய நபர்கள் ஊருக்குள் வந்தார்களா? குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இது போன்ற இழிவான செயலில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

டீக்கடை உரிமையாளர் கைது

இதையடுத்து, இரட்டைக்குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட டீக்கடையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கவிதாராமு, அங்கு தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதை அறிந்தார். இதையடுத்து, கலெக்டர் உத்தரவின் பேரில் டீக்கடை உரிமையாளர் மூக்கையா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அசுத்தப்படுத்திய மர்ம ஆசாமிகள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்தவுடன் மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு எங்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர். மேலும் மருத்துவ முகாம் அமைத்து குடிநீர் வசதியையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அன்னவாசல் அருகே கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை அழைத்துச்சென்று சாமி கும்பிட கலெக்டர் நடவடிக்கை எடுத்தார். அப்போது சாமி வந்ததை போல் ஆடி அவதூறாக பேசிய பெண், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அய்யனார் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இறையூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் தங்களை வழிபட பல தலை முறைகளாக அனுமதி மறுப்பதாக மாவட்ட கலெக்டரிடம் ஆதிதிராவிட மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு, ஆதிதிராவிட மக்களை அழைத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.

பெண் கைது

அப்போது அந்த கோவிலின் பூசாரியான மாற்று சமூகத்தை சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி சிங்கம்மாள் சாமி வந்ததை போல் ஆடி ஆதிதிராவிட மக்களை அவதூறாக பேசியதால் அதிர்ச்சி அடைந்த கலெக்டர், சிங்கம்மாள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையிலான போலீசார் சிங்கம்மாள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆதிதிராவிட மக்கள் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக அய்யனார் கோவிலில் வழிபாடு செய்ய முடியாமல் தவித்த எங்களுக்கு மாவட்ட கலெக்டர் மூலம் சாமி தரிசனம் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேநிலை நீடிக்க அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments