ரெயில்வே வேலைக்காக ரூ.2.67 கோடி லஞ்சம் கொடுத்து ஏமாந்த தமிழக பட்டதாரிகள்! டெல்லி ரெயில் நிலையத்தில் ரெயில்களை எண்ணிக்கொண்டிருந்த பரிதாபம்!!ரெயில்வேயில் வேலைக்காக ரூ.2.67 கோடி லஞ்சம் தந்து விட்டு, டெல்லி ரெயில் நிலையத்தில் தினமும் ரெயில்களை எண்ணிக்கொண்டிருந்த 28 தமிழக பட்டதாரிகள் ஏமாந்துபோனது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர், கிளார்க் என பணத்துக்கு ஏற்ப பல்வேறு வேலைகளை வாங்கித்தருவதாக கூறி ரூ.2 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை லஞ்சமாக பெற்று ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது அம்பலத்துக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 பேர், இப்படி ரூ.2 கோடியே 67 லட்சம் லஞ்சமாக தந்துள்ளனர். ரெயில்வே வேலைக்காக லஞ்சம் தந்தவர்கள், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கடந்த ஜூன்-ஜூலையில் ஒரு மாத காலம் பயிற்சி என்ற பெயரில் போலியாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் டிப்ளமோதாரர்கள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் அடங்குவார்கள்.

இவர்கள் அந்த ரெயில் நிலையத்தில் செய்த வேலை, தாங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளோம் என்று தெரியாமலேயே தினந்தோறும் வெவ்வேறு பிளாட்பாரங்களில் 8 மணி நேரம் கால் கடுக்க நின்று கொண்டிருந்து, வந்து செல்கிற ரெயில்களையும், அந்த ரெயில்களில் தலா எத்தனை பெட்டிகள் உள்ளன என்பதையும் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.

பயிற்சி முடிந்த பின்னர்தான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது இந்த வெள்ளந்தி இளைஞர்களுக்கு தெரிய வந்துள்ளது.

இந்த ரெயில்வே வேலை வாய்ப்பு மோசடி பற்றி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் முன்னாள் ராணுவ வீரரான சுப்புசாமி புகார் செய்துள்ளார். என்ன கொடுமை என்றால், இவர்தான் மோசடி கும்பலிடம் அவர்கள் மோசடி கும்பலினர் என்பது தெரியாமலேயே வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞர்களை அறிமுகம் செய்துள்ளார்.

ஏமாந்துபோன இளைஞர்களில் ஒருவரான மதுரையை சேர்ந்த செந்தில் குமார் கூறும்போது, “நாங்கள் ஒவ்வொருவரும் சுப்புசாமியிடம் ரெயில்வே வேலைக்காக தலா ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.24 லட்சம் வரை பணம் கொடுத்தோம். அவர் இந்த பணத்தையெல்லாம் விகாஸ் ரானா என்பவரிடம் கொடுத்துள்ளார். ரானா, வடக்கு ரெயில்வே அலுவலகத்தில் தான் துணை இயக்குனராக பணியாற்றுவதாக கூறி எல்லோரையும் நம்ப வைத்து மோசடி செய்துள்ளார்” என தெரிவித்தார். டிக்கெட் பரிசோதகர், போக்குவரத்து உதவியாளர், கிளார்க் என எல்லா வேலைக்கும் பயிற்சி, புதுடெல்லி ரெயில் நிலையத்தில் வந்து செல்கிற ரெயில்களை எண்ணுவதுதான் எனவும் செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்த மோசடியில் சிக்கிய சுப்புசாமி, விருதுநகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர், “நான் ஓய்வு பெற்றதில் இருந்து, எங்கள் பகுதியில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்கு, அதற்கென எந்த பணமும் பெறாமல் உதவி செய்து வந்துள்ளேன்” என தெரிவித்தார்.

இவர் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:-
நான் டெல்லியில் உள்ள எம்.பி.க்கள் குடியிருப்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சிவராமன் என்பவரை சந்தித்தேன். அவர் எனக்கு எம்.பி.க்கள், மந்திரிகள் அனைவரும் மிகவும் நெருக்கம், நான் வேலையில்லாத இளைஞர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தருகிறேன் என கூறினார். சிவராமன் சொல்லித்தான் வேலை தேடிக்கொண்டிருந்த 3 இளைஞர்களுடன் நான் டெல்லி சென்றேன். ஆனால் இதுபற்றி தகவல் அறிந்து மதுரை பகுதியைச் சேர்ந்த மேலும் 25 பேர் இதில் சேர்ந்து கொண்டார்கள்.

பணம் வழங்கிய இளைஞர்கள் டெல்லி கன்னாட்பிளேசில் உள்ள ரெயில்வே சென்டிரல் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவும், டெல்லி சங்கர் மார்க்கெட் பகுதியில் உள்ள வடக்கு ரெயில்வேயின் இளநிலை என்ஜினீயர் அலுவலகத்தில் சான்றிதழ் பரிசோதனைக்காகவும் அழைக்கப்பட்டார்கள். அதன்பின்னர் விகாஸ் ரானா, அவரது கூட்டாளி துபே என்னும் 2 பேர் அனைத்து இளைஞர்களையும் பரோடா இல்லத்துக்கு கூட்டிச்சென்று பயிற்சி ஏடு, போலியான பயிற்சி உத்தரவு என வழங்கினர். பின்னர் நாங்கள் சந்தேகப்பட்டு அவற்றின் நம்பகத்தன்மையை சரி பார்க்க முற்பட்டபோதுதான் அவை போலியான உத்தரவுகள் என தெரிய வந்தது.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பேரில் டெல்லி போலீசின் பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இளைஞர்களுக்கு ரெயில்வே எச்சரிக்கை:
ரெயில்வேயில் பல்வேறு வேலைகளை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் பற்றி தகவல் அறிந்து, வேலை தேடும் இளைஞர்களை ரெயில்வே துறை எச்சரித்துள்ளது.

இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் (ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு) யோகேஷ் பவேஜா கூறியதாவது:-
இது தொடர்பாக வழக்கமாக ரெயில்வே வாரியம் அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட மோசடி குறித்து எச்சரித்தும் வருகிறது. இளைஞர்கள்தான் இத்தகைய மோசடி கும்பல்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் ரெயில்வே அதிகாரிகளை எப்போதும் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே உண்மையை தெரிந்து கொள்ளலாம், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments