காரைக்குடி ரயில் நிலையத்தில் நடைமேடையை மாற்றி அமைக்க வேண்டும்: நீண்ட தூரம் நடந்து செல்ல முடியாமல் பயணிகள் அவதி


காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவில் நீண்ட தூரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து பயணிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. 

காரைக்குடி ரயில்வே ஸ்டேசனுக்கு பல்லவன், ரமேஸ்வரம், சென்னை, செங்கோட்டை, சிலம்பு, கோவை, புவனேஷ்வர், கன்னியாகுமரி என எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில் என 25 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் வேலைக்கு செல்கின்றனர். அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
இந்த ரயில்நிலையத்தில் 5 பிளாட்பார்ம் கள் உள்ளன. இதில் முதல் பிளாட்பார்மில் ரமேஸ்வரம்-சென்னை, செங்கோட்டை-சென்னை, கன்னியாகுமரி- பாண்டிச்சேரி, ராமேஸ்வரம்-சென்னை பயணிகள் ரயில்கள் வரும். 2, 3வது பிளாட்பார்மில் வாரணாசி ராமேஸ்வரம், சேது, கோவை-ரமேஸ்வரம், புவனேஸ்வர் ரயில்களும், 2வது பிளாட்பார்மில் மானாமதுரை திருச்சி, மன்னார்குடி, விருதுநகர் திருச்சி ஆகிய பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. 4, 5வது பிளாட்பார்மில் அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் இயக்கப்பட உள்ளது. முதல் பிளாட்பார்மில் இருந்து மற்ற ரயில்களுக்கு பயணிகள் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடை நீண்ட தூரத்தில் உள்ளது. இது பயணிகள் செல்ல ஏதுவாக இல்லை.
நடைமேடைக்கு அதிக தூரம் கடந்து செல்ல வேண்டியது உள்ளதால் பயணிகள் முதல் பிளாட்பார்மில் இருந்து கீழே இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து 2, 3வது பிளாட்பார்ம்களுக்கு செல்கின்றனர். இதனால் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணிகளின் நலன் கருதி நீண்ட தூரத்தில் உள்ள நடைமேடையை மாற்றி அமைக்க வேண்டும். இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளப்படாத நிலையே உள்ளது. 

ஒவ்வொரு முறை அதிகாரிகள் வரும்போதும் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி செல்வதோடு சரி. அதன் பிறகு நடவடிக்கை எடுப்பதில்லை.
இதுகுறித்து தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில், ரயில் பெட்டிகளை கணக்கிட்டு 500 மீட்டருக்கு அப்பால் நடைமேடை அமைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இருப்பினும் பயணிகள் நலன்கருதி ஸ்டேசன் அருகே நடைமேடை அமைக்க வேண்டும் என தொழில் வணிகக்கழகம் சார்பில் பலமுறை கோரிக்கை விடப்பட்டது. தற்போது புதிய ஸ்டேசன் அருகே இடதுபுறம் பிளாட்பார்ம் அமைக்க ரயில்வே கட்டுமானப்பிரிவு இடம் தேர்வு செய்து நிதி ஒதுக்கியதாக கூறப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்த திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments