புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவிய தீண்டாமை விவகாரம்: துரித நடவடிக்கை எடுத்த கலெக்டர், எஸ்.பி.க்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் , பொதுமக்கள் பாராட்டு 


புதுக்கோட்டை மாவட்டத்தில்  தீண்டாமை கொடுமையை களைய நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் எஸ்.பி. வந்திதா பாண்டேவிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிக்கை மூலம் பாராட்டு

புதுக்கோட்டையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் செய்த அதிரடி செயலுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.

புதுக்கோட்டையில் தீண்டாமை விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டு தெரிவித்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் வேங்கை வயலில் தலைமுறை தலைமுறையாக கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதற்கு பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, சம்பவ இடத்துக்கு சென்று பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச்சென்று சாமி கும்பிட வைத்திருந்தனர்.

மேலும் கோயிலுக்கு சென்ற பட்டியலின மக்களை இழிவாக பேசிய இருவர் மீதும் அங்கு உள்ள தேநீர் கடையில் இரட்டை குவலை முறையை பின்பற்றிய இருவர் மீது‌ம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்‌ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவை அனைத்துக்கும் முன்னதாக அப்பகுதியில் ஆதி திராவிட மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நடந்திருந்தது. அவ்விவகாரத்தில் விசாரணை செல்ல ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் சென்றபோதுதான், அடுத்தடுத்த கொடுமைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பேரில் அனைத்து பிரச்னைகளிலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டியிருக்கிறது. இதுபற்றி ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ 1. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் பகுதியில் உள்ள அய்யனார் கோயிலில் ஆதிதிராவிடர்கள் கோயிலில் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் கோயில் நுழைவுக்கு ஆவன செய்ததோடு, அதே கிராமத்தில் உள்ள தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட தேநீர்க்கடையில் ஆய்வு மேற்கொண்டு அக்கடையின் உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் துரித நடவடிக்கை எடுத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல்பாடுகளை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பாராட்டுகிறது.

மேலும் அதே மாவட்டத்தில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சாதியினர் பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனித மலக்கழிவுகள் மிதந்தாக புகார் அளிக்கப்பட்டதும் தற்காலிக நீர்த் தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கவும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து, அதில் விடப்படும் தண்ணீரின் தரத்தை ஆய்வு செய்த பின் வழக்கமாக செய்யப்படுவது போல் தண்ணீர் விநியோகிக்கவும் எடுக்கப்பட்ட முடிவும் பாராட்டத்தக்கது.

2. இருப்பினும் மேற்சொன்ன மூன்று சம்பவங்களைப் பொறுத்தும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தாமே முன்வந்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.

3. எனவே, மேற்படி சம்பவங்கள் பற்றியும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் இதுபோல் மீண்டும் நடக்கா வண்ணம் எடுக்க உத்தேசித்திருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை விரிவான அறிக்கைகளைத் தாக்கல் செய்ய, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் அறிவுறுத்துகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments