ஹவுரா (கொல்கத்தா) - நியூ ஜல்பைகுரி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


பிரதமர் மோடி, ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணம் அடைந்தார். இதையடுத்து இன்று மேற்கு வங்காளத்தில் மோடி பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது தாயாரின் இறுதி சடங்குகளை முடித்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். குஜராத்தில் இருந்து அவர் காணொலி காட்சி மூலம் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக இயக்கப்படும் ஹவுரா- நியூ ஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வந்தே பாரத் ரெயில் 564 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி 45 நிமிடத்தில் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3 மணி நேரம் பயண நேரம் மிச்சமாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, "நான் நேரடியாக விழாவில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால் என் தாயார் மறைவு காரணமாக நேரில் வர முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்" என்று கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

மேற்கு வங்காளத்தில் ரூ.7,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். ரூ.2,500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கொல்கத்தாவில் நடந்த வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் கவர்னர் ஆனந்த போஸ், ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிற்பகல் தேசிய கங்கை கவுன்சிலின் 2வது கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தாயார் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்தாலும் திட்டமிட்டபடி அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments