தொண்டி அருகே காரங்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு! மாங்குரோவ் காடுகளை கண்டு மகிழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் காரங்காட்டில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கிய நிலையில், படகு சவாரி சென்று மாங்குரோவ் காடுகளை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.

தொண்டி அருகே காரங்காடு கடல் பகுதியில் கடல் பசுக்கள், கடல் குதிரைகள், கடல் பாசிகள், வண்ண மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் வாழ்விடமாக உள்ளது. மேலும் இங்குள்ள அலையாத்தி எனப்படும் மாங்குரோவ் காடுகள் மனதை மயக்கும். சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டதால் தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் சதுப்பு நிலக்காட்டின் அழகை கண்டுகளிக்க படகு சவாரியும், துடுப்பு படகு சவாரியும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாண்டஸ் புயல் காரணமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அறிவிக்கபட்டதால் மீண்டும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கடலில் படகு சவாரி துவங்கியதாலும், விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


வனத்துறையினர் கூறுகையில், புத்தாண்டு துவங்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் படகு மற்றும் துடுப்பு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உடை மாற்றும் அறைகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 10:00 முதல் 4:30 மணி வரை படகு சவாரி செய்யலாம், என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments