புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவம்: ‘‘குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை’’ ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பேட்டி




புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.

ஆய்வக பரிசோதனை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆய்வுக்கு பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 11 பேர் கொண்ட குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இதில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டதை மாதிரி சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அந்த அசுத்தம் மனிதனுடையதா? விலங்கினதுடையதா? என்பது ஆய்வக பரிசோதனைக்கு பின் தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும். குற்றவாளிகள் யார்? என்பதை தற்போது உறுதிபடுத்த முடியாது. ஆய்வகத்தில் இருந்து பரிசோதனை முடிவுகள் வர வேண்டும். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

போலி சான்றிதழ்

இந்த சம்பவத்தின் விசாரணை தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ளோம். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பட்டியலினத்தவர், பழங்குடியினர் என போலியாக சான்றிதழ் பெற்றது தொடர்பாக 3,070 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பல வழக்குகள் 20 வருடங்களுக்கு முன்பு உள்ளதாகும். இந்த சான்றிதழ் உண்மையா? என விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 2 மாதங்களில் 800 வழக்குகள் முடிவெடித்து உள்ளோம். மீதமுள்ளவை வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக அமல்படுத்தவில்லை என கூற முடியாது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சரியாக அமல்படுத்தினால் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும். தமிழகத்தில் 20 சதவீதம் ஆதிதிராவிடர்கள், 1 சதவீதம் பழங்குடியினர் என இந்த மக்களுக்காக தான் இந்த சட்டம் உள்ளது. இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க கண்காணிப்பு குழு உள்ளது.

சாதிய பாகுபாடு புகார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய பாகுபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க அறிவிக்கப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணிற்கு 25 புகார்கள் வந்துள்ளது. இதனை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும். பொதுமக்கள் தானாக முன்வந்து புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் கல்லூரி விடுதிகளின் கட்டமைப்புகளை மாற்ற திட்டமிட்டுள்ளோம். அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்பதை கணக்கெடுத்து வருகிறோம். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நடந்த ஆய்வு கூட்டத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments