தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு: இன்று முதல் வீடு வீடாக டோக்கன்



ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 9 ஆம் தேதியில் இருந்து வழங்கப்பட இருக்கின்றன. இதையொட்டி இன்று முதல் வருகிற 8-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு வீடாக வழங்கப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பை அறிவித்து வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை.

பொங்கல் பரிசு
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு 21 வகையான பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசுத்தொகுப்பில் மீண்டும் ரொக்கப்பணம் சேர்த்து இருந்தது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

வரும் 9 ஆம் தேதி முதல்
எனினும், கரும்பையும் வழங்க வேண்டும் என்று விவசாயிகளும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து பொங்கல் பரிசுதொகுப்பில் ஒரு கரும்பும் இணைத்து வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். பொங்கல் பரிசுத்தொகை வரும் 9 ஆம் தேதி முதல் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.கஸ்டாலின் அன்றைய தினம் தொடங்கி வைக்கிறார்.

இன்று முதல் டோக்கன்
பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் அரிசி அட்டைதாரர்களுக்கு முன்பே டோக்கன் வழங்கி பரிசுத்தொகுப்பை சிரமம் இன்றி மக்கள் பெறுவற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. அதன்படி, பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட உள்ளன. இந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் நாள், நேரம், போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும். இந்த டோக்கனைக் காட்டி மக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ள முடியும்

ரேஷன் கடைகளில் தகவல் பலகை
இன்று முதல் வரும் 8 ஆம் தேதி வரை வீடு வீடாக பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்க உள்ளனர். வரும் 6 ஆம் தெதி வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் டோக்கன் வழங்கப்படாது என்றும், ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையில் எந்தெந்த அட்டைதாரர்கள் எந்த தேதியில் வந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்க வேண்டும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம்
பொங்கல் பரிசுத்தொகுப்பை மக்கள் சிரமம் இன்றி பெறுவதற்காக வரும் 13 ஆம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றதும் அதுபற்றிய தகவல் அவர்களின் செல்போனுக்கு மெசேஜ் மூலமாக தெரிவிக்கப்படும். பொங்கல் தொகுப்பில் குறைபாடுகள் இருந்தால் தெரிவிப்பதற்காக இலவச தொலைபேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களை மக்கள் தொடர்பு கொண்டு குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை வரும் 9 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருக்கின்றது. பயனாளர்கள் ரேஷன் கடைக்கு வரும் போது ஸ்மார்ட் கார்டுகளை கொண்டு வந்து கைரேகைகளை வைத்து பொருட்களையும் 1000 ரூபாய் ரொக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments