பிரான்சில் இருந்து 698 பயணிகளுடன் தூத்துக்குடி வந்த சொகுசு கப்பல் சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்
ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் ‘அமீரா’ என்ற சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 204 அடி நீளம். 13 அடுக்குகளுடன் கூடிய 413 அறைகள் உள்ளன. 835 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். மணிக்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த கப்பலில் 3 ஓட்டல்கள், நூலகம், விளையாட்டு கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன. கேப்டன் ஹூபர்ட் புளோர் தலைமையில் மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.

தூத்துக்குடி வருகை

இந்த சொகுசு கப்பல் கடந்த மாதம் 22-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் துறைமுகத்தில் இருந்து ெஜர்மனி, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த சுமார் 698 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்டது.

மால்டா, எகிப்து, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 8-ந் தேதி மும்பையை வந்தடைந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் கொச்சிக்கும், நேற்று காலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சொகுசு கப்பல் வந்தடைந்தது. இந்த கப்பல் துறைமுகத்தின் கூடுதல் கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு

கப்பலில் இருந்து இறங்கிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாதஸ்வரம், மேள வாத்தியங்கள் இசைக்கப்பட்டும், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்றவை கலை நிகழ்ச்சிகள் மூலமும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை சுற்றுலா பயணிகள் தங்கள் கேமரா மற்றும் செல்போன்களில் படம் பிடித்தனர். அவ்வப்போது கலைஞர்களை கைதட்டி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

உடல் வெப்ப பரிசோதனை

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு நடனமாடியபடி கலை பண்பாடுகள் குறித்து விளக்கக்கூடிய ராமச்சந்திரபிரபு உள்ளிட்ட 5 சுற்றுலா வழிகாட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குடியுரிமை அதிகாரிகள், பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தனர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள் பஸ், வேன்களில் புறப்பட்டனர்.

பனிமய மாதா ஆலயம்

இதில் 70 பயணிகள் பஸ் மூலம் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில், கதீட்ரல் ஆலயம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர். 200 பேர் தூத்துக்குடி பகுதியில் சுற்றி பார்க்க சென்றனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயத்தை பார்வையிட்டனர்.

அதன்பிறகு, மாநகர பகுதிகளில் உள்ள உப்பளங்களுக்கு சென்றனர். அங்கு உப்பு குவியல்கள் வைத்து இருப்பதையும், ஜிப்சம் எடுப்பதையும் பார்த்தனர். உப்பு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

சொகுசு கப்பல் இரவு 7 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. 25 நாடுகளுக்கு பயணம் செய்து வருகிற 26.4.2023 அன்று ஜெர்மனி பிரமேராவன் துறைமுகத்தில் சுற்றுபயணத்தை முடிக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments