புதுக்கோட்டையில் தலைமை ஆசிரியர் வீட்டில் 40 பவுன் நகைகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
புதுக்கோட்டை செல்லப்பா நகரை சேர்ந்தவர் சடகோபன் (வயது 52). இவர் கூத்தாச்சிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (49). இவர் அகரப்பட்டி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவைக்கு சென்று விட்டு நேற்று காலை பள்ளிகளுக்கு பணிக்கு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து டவுன் போலீசாருக்கு சடகோபன் தகவல் தெரிவித்தார்.

40 பவுன் நகைகள் திருட்டு

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் பீரோக்களில் கவரிங் நகைகளோடு, தங்க நகைகளையும் சேர்த்து வைத்திருக்கின்றனர். இதில் கவரிங் நகைகளை கட்டிலில் விட்டு விட்டு தங்க நகைகளை மட்டும் மர்மநபர்கள் திருடிச் சென்றிருக்கின்றனர்.

மொத்தம் 40 பவுன் நகைகள் திருடு போனதாக சடகோபன் போலீசாரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments