இலுப்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவ-மாணவிகள் போராட்டம்
இலுப்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்நிலைப்பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே எண்ணெய் ஊராட்சிக்கு உட்பட்ட மெய்யக்கவுண்டம்பட்டியில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியில் அந்தபகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் இப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழலில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் 6 ஆசிரியர்கள் மட்டும் பணியில் உள்ளனர். இந்த 6 ஆசிரியர்களிலும் லதா என்ற ஒரு கணித ஆசிரியர் மட்டுமே பெண் ஆசிரியராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஆசிரியை பணியிட மாற்றம்

இந்த நிலையில் கணித ஆசிரியரான லதா அப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளோடு அன்பாக பழகியதோடு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பள்ளியின் பல்வேறு வசதிக்கும் முக்கிய பங்காற்றி வந்ததாக அந்த பள்ளி மாணவ-மாணவிகளால் கூறப்படுகிறது. இவ்வாறு அப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் அன்பை பெற்ற ஆசிரியர் லதாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மணமேல்குடியில் உள்ள ஆதிதிராவிடர் காப்பகத்துக்கு பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், பள்ளி மேம்பாட்டிற்காகவும் பாடுபட்ட ஆசிரியர் லதாவை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம், பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் புதுக்கோட்டை கலெக்டரை சந்தித்து மீண்டும் லதாவை அதே பள்ளியில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

இந்தநிலையில் நேற்று அந்த பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து மீண்டும் ஆசிரியை லதாவை தங்கள் பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ-மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் மாணவர்களிடம் பேச்சவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

மீண்டும் பணியமர்த்த வேண்டும்

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், ஆசிரியை லதா கடந்த 8 ஆண்டுகளாக மெய்யக்கவுண்டம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது முயற்சியால் இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலும், தமிழக அளவிலும் பல்வேறு பரிசுகளை பெற்று ஒரு சிறந்த பள்ளியாக இந்த பள்ளி திகழ்வதற்கு அவரது செயல்பாடுகளும் உழைப்பும் முக்கிய காரணம். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இப்பள்ளியில் பயிலும் நிலையில், இங்கிருந்த ஒரே பெண் ஆசிரியையும் மாறுதல் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியையை மீண்டும் தங்கள் பள்ளியில் பணியமர்த்த வேண்டும் எனவும் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments