மத்திய அரசுக்கு விவர அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது ராமேசுவரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் எ.வ.வேலு தகவல்
ராமேசுவரம் - தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்த விவர அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

கடல்சார் வாரிய கூட்டம்

தமிழ்நாடு கடல்சார் வாரிய கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

தமிழ்நாடு, தொழில் முனைவோருக்கான முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் அடிப்படையில் தனியார் முதலீட்டு துறைமுகங்கள் அமைப்பதற்கு மிகவும் சாத்தியமான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. 1,076 கி.மீ. நீள கடற்கரை பகுதியில் சாத்தியமான இடங்களில் சுற்றுப்புறச்சூழல் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பல்வேறு சிறு துறைமுகங்களை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆராய்ந்து வருகிறது.

ஆழ்கடல் துறைமுகங்கள் அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு (இலங்கை) பயணிகள் படகு போக்குவரத்தை தொடங்குதல், கடற்கரை சார்ந்த நீர் விளையாட்டுகள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகளும் ஆராயப்பட்டு வருகிறது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து

மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் கீழ், கடலூர் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விவேகானந்தர் பாறையில் தோணித்துறை நீட்டிப்பு, விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்கும் தொங்கு பாலம் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

ராமேசுவரம் - இலங்கை தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குதல், மிதக்கும் தோணித்துறைகள் அமைத்தல் ஆகியவற்றுக்கான விவர அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு நிதியுதவி கோரப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments