போட்டி தேர்வுகளில் பங்கேற்க குறைந்தபட்சம் 40 மதிப்பெண் தேவை அரசு பணியில் சேர தமிழ் கட்டாயம் தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது




தமிழக அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழ் மொழி தெரிந்தவர்களையே தமிழக அரசு பணிகளில் சோ்க்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சட்டமசோதா

இந்தநிலையில் அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுத தமிழ்மொழி தேர்வில் 40 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ஐ திருத்துவதற்கான சட்டமசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதிய பிரிவு சேர்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 21-ம் பிரிவில் 21-ஏ என்ற புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது. அந்த சட்டத்தின் 21-ம் பிரிவின்படி, தமிழகத்தின் அலுவல் மொழியான தமிழில் போதிய அறிவு பெறாத எவரும், நேரடி ஆள்சேர்ப்பு மூலம் நடைபெறும் அரசு பணி எதிலும் நியமனம் செய்யப்பட தகுதி உள்ளவராக கருதப்படமாட்டார்.

அரசு பணிக்கு விண்ணப்பிக்கும்போது, தமிழில் போதிய அறிவு இல்லாதிருந்த விண்ணப்பதாரர்கள், தமிழ் மொழித் தகுதி பெறாமலேயே பணி நியமனம் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்ட தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் 2-ம் மொழித்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு பணியில் சேர விண்ணப்பிக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பணியில் இருந்து அவர்களை விடுவிக்கலாம்.

தற்போது அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் 21-ஏ பிரிவின்படி, 1.12.2021 அன்றைய தேதியில் இருந்து, நேரடி ஆள்சேர்ப்பு மூலம் எந்தவொரு பணியிலும் எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் நபர் எவரும், பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மொழித்தாளில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவேண்டும். தமிழ் மொழி தேர்வுக்கான பாடத்திட்டத்தை அவ்வப்போது அரசு வெளியிடும்.

கட்டாய தமிழ் மொழித்தாள்

முன்னதாக, தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் 100 சதவீதம் தமிழ் இளைஞர்களை சேர்ப்பதை உறுதி செய்யவும், ஆள்சேர்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆள்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழித்தாள் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 1.12.2021 அன்றைய தேதியிட்ட அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஏற்ற வகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் விவாதம்

இந்த சட்டமசோதா நேற்று சட்டசபையில் விவாதத்திற்கு விடப்பட்டது. அப்போது எம்.எல்.ஏ.க்கள் வைத்த விவாதம் வருமாறு:-

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி):- 2016-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டப்படி மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் தமிழ் தெரியாவிட்டாலும் பணியில் சேர வாய்ப்பு இருந்தது. பின்னர் அவர்கள் தமிழை எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என்றிருந்தது. அதன்படி நுற்றுக்கணக்கான வெளிமாநிலத்தவர் இங்கு அதிகாரிகளாக பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

மற்ற சில மாநிலங்களில்கூட, அங்கு வசிக்கும் வேறு மாநிலத்தவர்களுக்கு அரசு பணி வழங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கு வசித்தாலும் சரி, தமிழகத்திற்கு வந்து அரசு பணியில் சேரலாம் என்று கடந்த காலத்தில் வழிவகை செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் பூர்வக்குடி தமிழ் மக்களுக்கு அரசு பணி கிடைக்காமல் போய்விடும்.

தமிழை குறுகிய காலத்தில் கற்று அரசு பணியில் வட இந்தியர்கள் சேர இன்னும் வாய்ப்புள்ளது. எனவே வட இந்தியர்களை தமிழகத்தில் திறந்துவிடக்கூடிய சூழ்நிலை இனிமேல் எழுந்துவிடக்கூடாது என்பதற்கு ஏற்றபடி இந்த சட்ட திருத்தம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஏனென்றால், இதிலும் அவர்கள் வந்து சேரும் வாய்ப்புள்ளது.

நிறைவேறியது

ஜி.கே.மணி (பா.ம.க.):- தமிழகத்தில் பதிவு செய்துவிட்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைக்கு காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் அனைத்தும் வடமாநிலத்தவர்கள்தான் இருக்கின்றனர்.

இதுபோன்ற சட்டங்களை தொடர்ந்து கொண்டு வரவேண்டும். ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும், 2 ஆண்டுகளில் தமிழை கற்று பணியில் நீடிக்கலாம் என்பது வடமாநிலத்தவர்கள் இங்கு பணியில் சேர வாய்ப்பை ஏற்படுத்திவிடும். எனவே மசோதாவை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்):- தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் மிகப்பெரிய பின்னடைவு உள்ளது. இதில் முழு தீர்வு காணும் வகையில் சட்டங்கள் அமைக்கப்பட வேண்டும். பூனைக்கு யார் மணி கட்டுவார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. அந்த வகையில் சட்டமசோதா அமைந்தால் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். எனவே இதில் தக்க தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையை திருத்த இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறவில்லை என்றால், தமிழ்த் தேர்வே தேவையில்லை என்ற சூழ்நிலை வந்துவிடும். அதைத் தவிர்க்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் கூறும் கருத்துகளையும் அரசு எடுத்துக்கொள்ளும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு மசோதா விடப்பட்டு, பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட 3 சட்ட மசோதாக்களும் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. என்றாலும், இந்த சட்ட மசோதாவுக்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் அது அமலுக்கு வரும்.

விளக்கம்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 21-ம் பிரிவின்படி, தமிழ் மொழித் தகுதி பெறாமலேயே அரசு பணியில் சேர்ந்துவிடலாம். பின்னர் தமிழ் படித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக்கொள்ளலாம். அப்படி தேர்ச்சி பெற்றால் தொடர்ந்து அரசு பணியில் நீடிக்கலாம். தேர்ச்சி பெறவில்லை என்றால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.

தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 21-ஏ பிரிவின்படி, பணியில் சேர்வதற்கு முன்பு பணி நியமனத்திற்காக நடத்தப்படும் தமிழ் மொழித்தாள் தேர்வில் 40 சதவீதத்திற்கும் குறையாமல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால் அரசு பணிக்கான போட்டி தேர்வுகளை (டிஎன்பிஎஸ்சி) எழுத முடியாது என்று தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments