வாரணாசி டூ திப்ரூகர்... ‌(வங்கதேசம் வழியாக) கங்கை நதியில் உலகின் மிக நீண்ட கப்பல் பயணம்! 51 நாட்களில் 3,200 கிலோமீட்டர் தூர பயணம் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
இந்தியாவின் புனித நதியாக கருதப்படும் கங்கையில் உலகின் மிக நீண்ட கப்பல் பயணம் மேற்கொண்டால் எப்படி இருக்கும்? இது கனவாக இருந்த சூழலில் இன்று நிஜமாகி உள்ளது. இனிமேல் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை ஜாலியாக ஒரு கப்பல் பயணம் செல்லலாம். இதற்கான விதையை பிரதமர் மோடி  போட்டுள்ளார்.வாரணாசியில் தொடங்கி வைப்பு

அதாவது, கப்பல் சேவையை காணொலி காட்சி வாயிலாக வாரணாசியில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். அப்போது, கப்பல் பயணிகளிடம் பேசுகையில், நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை இந்தியா கொண்டிருக்கிறது. இதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இந்த விஷயத்தை உங்கள் இதயத்தால் மட்டும் அனுபவிக்க முடியும் என்று தெரிவித்தார்.

முதல் பயணத்தில் 32 பேர்

முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 32 பயணிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த பயணத்தின் மூலம் கிழக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்கள் உலகின் கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள MV Ganga Vilas என்ற கப்பல் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. 51 நாட்களில் 3,200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவுள்ளது.

இதில் 36 பயணிகள் தங்கிக் கொள்ள முடியும். இதுதவிர கப்பல் ஊழியர்கள் 40 பேர் உடன் பயணிக்கின்றனர். இவர்களுக்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் 62 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அழகு நிலையம், சலூன், உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

பயணக் கட்டணம்

இந்த பயணத்திற்கான கட்டணம் தினசரி 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஒட்டுமொத்த பயணத்திற்கும் ஒரு நபருக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் வகையில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கங்கை நதியில் கலக்காது.

முக்கிய நகரங்கள் வழி பயணம்

மேலும் குளிப்பதற்கு மற்றும் பிற விஷயங்களுக்கு கங்கை நதி நீரை தூய்மைப்படுத்தி பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பயணத்தின் மூலம் 27 ஆறுகளை பார்க்கலாம். புகழ்பெற்ற பல்வேறு நகரங்களை கண்டு ரசிக்கலாம். குறிப்பாக பிகாரின் பாட்னா, ஜார்க்கண்டின் ஷாஹிகஞ்ச், மேற்குவங்கத்தின் கொல்கத்தா, வங்கதேசத்தின் டாக்கா, அசாமின் கவுகாத்தி ஆகியவை வழியாக கப்பல் பயணிக்கிறது.

குறிப்பாக வெளிநாட்டு மக்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தின் கலை, கலாச்சாரம், வரலாறு, ஆன்மீகம் ஆகியவற்றை அனுபவிக்கும் வகையில் இந்த கப்பல் பயணம் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments